கோலாலம்பூர்: பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) கீழ் தடுத்து வைக்கும் நாட்களை 28 நாட்களில் இருந்து 14 நாட்களாககுறைக்க பரிசிலித்து வருவதாக உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.
கொடூரமானவை என்று கருதப்படும் சட்டங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு, அதன் விதிகள் அல்லது மனிதாபிமானமற்ற நடவடிக்கை அல்லது மனித உரிமைகளுக்கு முரணானதா என்று ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
“சொஸ்மா தற்போது 28 நாட்கள் தடுப்புக் காவலைக் கொண்டுள்ளது. இது மிக நீண்டது என்று பலர் கூறுகிறார்கள், அமைச்சரவை அதனைக் குறைப்பது நல்லது என்று நினைக்கிறார்கள்.”
“ஆனால் காவல்துறையினர் கூறுகையில், அந்த சந்தேக நபர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்றால், காவல் துறை முடிவெடுப்பதற்கு அதிக நேரம் தேவை என்று கூறுகின்றனர்.” என்று அவர் கூறினார்.
“ஆனால், தற்போதைக்கு 14 நாட்கள் இருக்கக்கூடும். மேலும் 14 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்ற கருத்து இருப்பின் அதனை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று அங்கு முடிவு செய்யப்படட்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது நியாயமான கோரிக்கையாக உள்ளது.” என்று அவர் நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.
சொஸ்மா உள்ளிட்ட கடுமையான அல்லது தவறான சட்டங்களை அரசாங்கம் விரைவில் திருத்தும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதனைத் தெரிவித்தார்.