கோலாலம்பூர்: மக்களவையில் கலந்து கொண்டபோது இன்று திங்கட்கிழமை காலை மூச்சுத் திணறல் காரணமாக தடுமாறி கீழே அமர்ந்த தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துணை அமைச்சர் எடின் ஷாஸ்லீ ஷிட்டின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இருந்து மருத்துவ வண்டி மூலம் அவர் காலை 11.20 மணியளவில் தேசிய இருதய சிகிச்சை மையத்தின் (ஐஜேஎன்) அவசரபிரிவுக்கு கொண்டுவரப்பட்டார்.
துணை அமைச்சரின் சிறப்பு செயலாளர் பாராஹியா ஜூபிர் ஐஜேஎன்–இல் பெர்னாமாவை சந்தித்தபோது, கோலா பிலா நாடாளுமன்ர உறுப்பினர் இப்போது தீவிர பரிசோதனை பிரிவில் மேலதிக பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.
இன்று காலை அமர்வில் வோங் ஹான் வையின் (புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர்) கேள்விக்கு வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை துணை அமைச்சர் டத்தோ காமாருல் பாஹ்ரின் ஷா ராஜா அகமட் பாஹாருடின் ஷா பதிலளித்தபோது எடின்னுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
மக்களவையின் துணை சபாநாயகர் டத்தோ முகமட் ராஷீட் ஹாஸ்னான் உடனடியாக அமர்வை சுமார் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.