கோலாலம்பூர்: முன்னதாக ஜசெக குறித்த தமது கருத்துக்கு பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
அண்மையில் மீனவர்களுடனான தமது சந்திப்பின் போது, அகமட் பைசால் ஜசெகவினரோடு தாம் தனியாக போராட வேண்டியுள்ளதாகக் கூறியிருந்தது, மாநில ஜசெக மற்றும் பிகேஆர் தலைவர்களின் ஆட்சேபனைகளைத் தூண்டியது.
“நான் ஏதாவது தவறாக சொன்னேனா?” என்று அகமட் பைசால் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.
மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாமியம் நலன்கள், பாதுகாப்பு பற்றி மக்களுக்குக் கூறும் காணொளி வெளியானதற்காக ஜசெக அகமட் பைசாலை நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழுவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தது.
கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அகமட் பைசால் பாசாங்குத்தனமானவர் என்று வர்ணித்து, அவர் மந்திரி பெசாராக இருக்க தகுதியற்றவர் என்று பேராக் பிகேஆர் தலைவர் பார்ஹாஷ் வாபா சால்வடார் ரிசால் முபாராக் கூறினார்.
முன்னதாக, டாக்டர் மகாதிர் முகமட் தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற உச்சக்குழுக் கூட்டத்தில் அகமட் பைசால் கலந்து கொண்டார். அவரது கருத்து தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் அகமட் பைசால் வலியுறுத்தியதுடன், அவர் இந்த விவகாரத்தை பெர்சாத்துவின் உச்சக்குழு தலைவருக்கு விளக்கினார்.
பெர்சாத்து கூட்டத்திற்குப் பிறகு நேற்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிரதமர், அகமட் பைசாலைப் தற்காத்துப் பேசினார். பேராக்கின் நிலைமையை மீனவர் குழுவுக்கு அவர் விளக்க வேண்டும் என்றார்.
அகமட் பைசால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.