கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்கில் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் தலையிட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்று பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
நாட்டில் சட்ட செயல்முறை வெளிப்படையாக மற்றும் சுயாதீனமாக செயல்படுகிறது என்றும் அது மதிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
“நான் தலையிட விரும்பவில்லை. நஜிப்பை நீதிபதி தற்காத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளார். எனவே சட்ட செயல்முறை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.”
“சில குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதற்கான உண்மைகள் அல்லது ஆதாரங்களை வழங்காவிட்டால் நாம் அவர்களை கண்டுக்கொள்ளக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.
முன்னாள் பிரதமர் வழக்கில் டாக்டர் மகாதீர் தலையிட்டதாக அம்னோ உச்சக்குழு உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் குற்றம் சாட்டியதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தன.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட்டின் 42 மில்லியன் ரிங்கிட் நிதியை மோசடி செய்த ஏழு வழக்குகளிலும் தம்மை தற்காத்துக் கொள்ள நஜிப்புக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.