ஜகார்த்தா: தற்கொலை குண்டுவெடிப்புச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை சுமத்ராவில் உள்ள மேடான் காவல் துறை தலைமையகத்திற்கு வெளியே நடந்துள்ளதாக பெர்னாமா குறிப்பிட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 8.40 மணியளவில் ஏற்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 6 பேர் காயமடைந்தனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
காவல் துறை பேச்சாளர் முகமட் இக்பால் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் சோதனைப் பகுதியைக் கடந்து சென்று பொது மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தை நோக்கி சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.
தான் கொண்டு வந்த வெடிபொருட்களை வெடித்து தாக்குதல் நடத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் கூறினார்.
காயமடைந்தவர்களில் நான்கு காவல் துறையினர் மற்றும் இரண்டு பொதுமக்கள்.
காவல் துறை தலைமையகத்தில், போதைப்பொருள் துறைக்கு வெளியே ஒரு வாகன நிறுத்துமிடத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்தோனிசிய அதிகாரிகள் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து இன்னும் விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.