Home 13வது பொதுத் தேர்தல் துரோனோ தொகுதியில் போட்டியிட ம.இ.கா விற்கு ம.சீ.ச வழிவிட்டது

துரோனோ தொகுதியில் போட்டியிட ம.இ.கா விற்கு ம.சீ.ச வழிவிட்டது

420
0
SHARE
Ad

Chua Soi Lekகோப்பெங், ஏப்ரல் 7 –  எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில், பேராக் மாநிலம் துரோனோ சட்டமன்ற தொகுதியில் ம.இ.கா போட்டியிடும் வகையில் ம.சீ.ச  கட்சி வழி விட்டுள்ளதாக பேராக் மாநில ம.சீ.ச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுவா சொய் லெக் தெரிவித்துள்ளார்.

மேலும் பேராக் மாநிலத்தில் 13% சதவிகிதம்  இந்திய வாக்காளர்கள் நிறைந்துள்ளதால், இந்த தொகுதி மாற்றம் இந்திய மக்கள் விரும்பும் வகையிலும், அதே நேரத்தில் அவர்கள் தேசிய முன்னணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் இருக்கும் என்றும் சுவா தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது ம.இ.கா விடம் உள்ள 55% சீன வாக்காளர்கள் நிறைந்த சுங்காய் சட்டமன்ற தொகுதியை ம.சீ.ச வும், அதற்கு பதிலாக 45 % இந்திய வாக்காளர்கள் நிறைந்த பந்தோங் தொகுதியை ம.இ.கா வும் தொகுதி மாற்றம் செய்து கொள்ளப்போவதையும் சுவா உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து சுவா மேலும் கூறுகையில், இந்த தொகுதி மாற்றம் குறித்து பிரதமர் நஜிப்பிடம் தான் கலந்தாலோசித்து விட்டதாகவும், தேசிய முன்னணியின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் இந்த தொகுதி மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் சுவா கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுத்தேர்தலில் துரோனோ சட்டமன்ற தொகுதியில் ம.இ.கா போட்டியிடப்போவதாக  பேராக் மாநில ம.இ.கா துணைத் தலைவர் ஆர்.கணேசன் கடந்த சனிக்கிழமை அறிக்கை விட்டதைத் தொடர்ந்து, பத்து காஜா ம.சீ.ச சார்பாக ஆர்பாட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.