கோலாலம்பூர்- பாலியல் சர்ச்சையில் சிக்கியபோது அப்போதைய துணைப் பிரதமர் நஜிப் தமக்கு உதவிக்கரம் நீட்டியதாக மசீச முன்னாள் தலைவர் சுவா சொய் லெக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், பிரதமர் நஜிப் எந்த விஷயத்தையும் காது கொடுத்து பொறுமையாக கேட்கக்கூடியவர் எனப் பாராட்டியுள்ளார்.
“பாலியல் விவகாரத்தில் சிக்கியபோது தொலைக்காட்சியில் உரையாற்றுவதற்காக தயாரானேன். அந்த உரையை நஜிப் முன்னிலையில்தான் எழுதினேன். இதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த உரையை நான் கடினமானதாக, இறுக்கமானதாக தயாரித்துள்ளதாக அவர் கருதினார். எனவே அவரே அந்த உரையை மாற்றியமைத்தார்,” என்று சுவா கூறியுள்ளார்.
அக்குறிப்பிட்ட பாலியல் விவகாரம் முடிவுக்கு வந்து 8 ஆண்டுகளான பிறகும், நடப்பு மசீச தலைவரை தாம் விமர்சிக்கும் சமயங்களில் எல்லாம், தமது எதிர்த்தரப்பினர் குறிப்பிட்ட பாலியல் காணொளியை வைத்து அரசியல் செய்வதாக அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
“என்னைக் காயப்படுத்த வேண்டுமென நினைக்கிறீர்கள் எனில், அது முன்பே நடந்துவிட்டது. நடந்தவற்றுக்கு நான் ஏற்கெனவே விலை கொடுத்துவிட்டேன்.
“குறிப்பிட்ட காணொளியில் இருப்பது நான்தான் என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டேன். எனது வழக்கறிஞர்கள் அதற்கு அவசியமில்லை என்றும், காணொளியில் இருப்பது நான்தான் என எவராலும் நிரூபிக்க இயலாது என்றும் கூறினர். எனினும் எனது செயல்பாட்டுக்கான பொறுப்பை நானே ஏற்க வேண்டும் என முடிவெடுத்தேன். அவ்வாறு உண்மையை ஒப்புக் கொண்டதற்காக நான் வருந்தவில்லை. ஏனெனில் வாழ்க்கைப் பயணம் தொடர வேண்டும்” என்று சுவா மேலும் தெரிவித்துள்ளார்.