பாலி – இந்தோனேசியாவின் சுற்றுலாத் தீவான பாலியில் கைது செய்யப்பட்ட இந்தியாவின் பிரபல குண்டர் கும்பல் தலைவன் சோட்டா ராஜனின் கணினி மற்றும் கைத்தொலைபேசிகளை பாலி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சோட்டா ராஜனின் இந்த உடமைகளைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென இந்தியக் காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவான சிபிஐ கோரிக்கை விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\
சோட்டா ராஜனின் கணினி மற்றும் கைத்தொலைபேசிகளைக் கொண்டு, பிரபல நிழல் உலக தாதா டாவுட் இப்ராகிமின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க முடியுமென சிபிஐ கருதுவதாகவும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் இன்று இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரியான சஞ்சீவ் அகர்வால் தடுப்புக்காவலில் இருக்கும் சோட்டா ராஜனைச் சென்று சந்தித்தார் என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காவலில் இருக்கும் சோட்டா ராஜனை முதன் முதலாக சந்தித்திருக்கும் முதல் உயர் தூதரக அதிகாரி இவராவார்.
இதனைத் தொடர்ந்து நல்லெண்ண வருகையாக அதிகாரபூர்வமாக, இந்தோனேசியா சென்றிருக்கும் இந்தியத் துணை அதிபர் ஹாமிட் அன்சாரியும் சோட்டா ராஜனை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி இந்தோனேசிய அரசிடம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.