Home Featured நாடு “மஇகாவில் மாற்றங்கள் ஏற்படுத்தும்வரை ஓயமாட்டேன் – பதவியும் விலக மாட்டேன்” – டாக்டர் சுப்ரா திட்டவட்டம்

“மஇகாவில் மாற்றங்கள் ஏற்படுத்தும்வரை ஓயமாட்டேன் – பதவியும் விலக மாட்டேன்” – டாக்டர் சுப்ரா திட்டவட்டம்

553
0
SHARE
Ad

Subramaniam-MICகோலாலம்பூர் – “பண அரசியலுக்கு மஇகா பலியாகிவிடக் கூடாது. பணம் இருப்பதால் மட்டும் தகுதியற்ற ஒருவர் மஇகாவில் உயர் பதவிக்கு வரும் அவல நிலை மஇகாவுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. தகுதி வாய்ந்தவர்கள், திறமையாளர்கள் பணம் இல்லாத காரணத்தால் கட்சியில் பதவி வகிக்க முடியாத சூழ்நிலையும் உருவாகக் கூடாது. அதனால்தான் பண அரசியலை மஇகாவிலிருந்து ஒழித்துக் கட்டும் முயற்சியில் நான் இறங்கியுள்ளேன். செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்யாவிட்டால் அந்தப் பதவியில் இருப்பதிலும் எந்தவிதப் பயனும் இல்லை” என இன்று கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள மஇகா பொதுப் பேரவைக்கான பேராளர்களிடம் உரையாற்றியபோது மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

“பண அரசியல் மட்டுமல்லாது, மேலும் பல மாற்றங்களையும் மஇகாவில் செய்யவேண்டியுள்ளது. அந்த மாற்றங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அவற்றை செய்து முடிக்காமல் நான் பதவியிலிருந்து விலகமாட்டேன். இந்த மாற்றங்களையெல்லாம் எவ்வளவு சீக்கிரம் செய்து முடிக்கின்றேனோ அவ்வளவு சீக்கிரம் நானும் பதவியை விட்டு விலகிவிடுவேன்” என்றும் தனது உரையில் சுப்ரா குறிப்பிட்டார்.

தான் ஆதரிக்கும் 29 பேர் கொண்ட மத்திய செயலவைக்கான அணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யும் வகையில், இன்று மாலை இங்கு கோலாலம்பூரிலுள்ள உணவகம் ஒன்றில் மஇகா கூட்டரசுப் பிரதேச பேராளர்களிடையே உரையாற்றியபோதே டாக்டர் சுப்ரா மேற்கண்டவாறு கூறினார்.

#TamilSchoolmychoice

பின்னர் நகைச்சுவையாக “அதனால், நான் சீக்கிரம் எனது பதவியை விட்டு விட்டுப் போக வேண்டும் என நீங்கள் விரும்பினால், என்னோடு ஒத்துழைத்து இந்த மாற்றங்களை கூடிய விரைவில் மஇகாவில் நிறைவேற்ற நீங்களும் என்னோடு பாடுபடுங்கள். அப்போதுதான் நான் சீக்கிரமாக விரும்புகின்ற மாற்றங்களை ஏற்படுத்தி விட்டு, பதவி விலகுவேன்” என பேராளர்களின் சிரிப்பொலிகளுக்கிடையே தெரிவித்தார்.

அதன் பின்னர் தான் ஆதரிக்கும் 29 வேட்பாளர்களை மேடைக்கு அழைத்து டாக்டர் சுப்ரா பேராளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.