சியோல் – சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் இன்று தென் கொரியாவின் தலைநகர் சியோலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த 2012-ம் ஆண்டிற்குப் பிறகு இந்த மூன்று நாடுகளின் முக்கியத் தலைவர் சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறை ஆகும். எப்பொழுதுமே சீரான நல்லுறவு இல்லாத இம்மூன்று நாடுகளும் எதிர்கால நலன் கருதியும், பொருளாதார முன்னேற்பாடுகளுக்காகவும் இந்த சந்திப்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.
இந்த சந்திப்பின் போது உரையாற்றிய ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, “இம்மூன்று நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பு மீண்டும் திரும்பி உள்ளது” என்று கூறினார். அதனை சீனா பிரதமர் லீ கெஹியாங்கும்(வலது), தென் கொரிய பிரதமர் பார்க் யுவான் ஹைய்யும்(நடுவில்) ஏற்றுக் கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது மூன்று நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், எல்லைப் பிரச்சனைகள் மற்றும் வட கொரியாவின் அச்சுறுத்தல் ஆகியவை குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.