சென்னை – மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து ஆரம்பித்துள்ள மக்கள் நல கூட்டு இயக்கத்தின் கூட்டணிக்குள் தேமுதிக வந்தால், முதல்வர் வேட்பாளராக அவரை அறிவிக்க அந்த இயக்கத்தினர் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக விஜயகாந்திடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என வெளியாகி உள்ள இந்த தகவல்களை வெறும் வதந்தியாகவும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனெனில், சமீபத்தில் மயிலாடுதுறையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், அதிமுக-திமுகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்னர், மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வைகோவும், விஜயகாந்தும் பயணித்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, இருவரும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைகோ சந்திப்பிற்கு பின்னர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரையும் சந்தித்துப் பேசியது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த சந்திப்பின் போது அவர்களும், விஜயகாந்த் மக்கள் நல கூட்டு இயக்கத்தின் முதல்வர் வேட்பாளராக இருப்பதற்கு பச்சைக் கொடி காட்டியதாகக் கூறப்படுகிறது.
எனினும், விஜயகாந்த் இதுதொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என தேமுதிக வட்டாரங்கள் கூறுன்றன.