கோலாலம்பூர்: விமான ஒழுங்குமுறையின் மதிப்பீட்டு நிலையை வகை 1-க்கு மீண்டும் திருப்புவதில் மலேசிய விமான போக்குவரத்து ஆணையத்தின் (சிஏஏஎம்) முயற்சிகளை கண்காணிக்க அரசு ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
கடந்த வாரம் சிஏஏஎம்மின் பட்டியலை வகை 2-க்கு தரமிறக்கிய அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிருவாகத்தின் (எப்ஏஏ) நடவடிக்கையைத் தொடர்ந்து முன்மொழியப்பட்ட தீர்வு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
இந்த சிறப்பு பணிக்குழுவை டத்தோ இர் கோக் சூ சோன் வழிநடத்துவார் என்று அவர் கூறினார்.
“வகை 1 நிலையை மீண்டும் பெறுவதற்கான நோக்கத்துடன், அனைத்து எப்ஏஏ மதிப்பீட்டு முடிவுகளையும் இறுதி செய்வதில், அதன் முன்னேற்றம் குறித்து பணிக்குழு போக்குவரத்து அமைச்சர் மற்றும் சிஏஏஎம்மிற்கு அறிக்கை அளிக்கும்.”
“பணிக்குழுவின் தலைவராக டத்தோ கோக்கின் பங்கு சிறப்புக் குழுவின் பணிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் மேம்பாட்டு செயல்முறையை வழிநடத்துதல் மற்றும் பணித் திட்டத்தை மறுஆய்வு செய்தல் ஆகும். அத்துடன் பணித் திட்டத்தை செயல்படுத்துவதை முழுமையாகக் கட்டுப்படுத்துதல் ஆகியவையும் அடங்கும்” என்று அவர் நேற்று திங்கட்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையில், விமான வான்வெளி கட்டணங்கள் உட்பட விமானங்களுக்கு விதிக்கப்படும் அனைத்து தற்போதைய கட்டணங்களையும் சிஏஏஎம் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று லோக் கூறினார்.
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான விமான நிறுவனங்களுக்கு வருமான ஆதாரமாக இருக்கும் இந்த கட்டணங்கள் 2006 முதல் மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது.
மலேசியா 2003 முதல் வகை 1-இல் இருந்தது குறிப்பிடத்தக்கது.