2019 நிதிநிலை அறிக்கைவழி மித்ராவிற்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் மானியத்தில், பிரதமர் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கை மனுக்களில், இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுக்கு வெ.99.3 மில்லியன் வரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் 205 சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஏனைய அரசாங்க நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட குழுவினரின் ஐந்து கட்ட பரிசீலனைக்குப் பின்னர்தான் பொருத்தமான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு இந்நிதி ஒதுக்கப்படுகிறது. இதுவரை கல்வி, திறன் பயிற்சி, பொருளாதார மீட்சி, வேலைவாய்ப்பு, சமூக நலம், அடையாளம் மற்றும் உள்ளடக்கம் ஆகிய தளங்களில் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“மித்ரா உருவாக்கப்பட்டதன் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் ‘பி40’ இந்தியக் குடும்பங்கள் மற்றும் தனிப்பட்டவர்களின் மீட்சிதான் மித்ராவின் இலக்காக உள்ளது. மித்ராவைப் பொறுத்தவரை 2019-ஆம் ஆண்டுக்குரிய மானியத் தொகை முழுவதும் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு ஏறக்குறைய பகிர்ந்து அளிக்கப்பட்டுவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதேவேளை, இதன் தொடர்பில் உரிய ஆவணங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டன” என்றும் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேதமூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.