டிரானா: நேற்று செவ்வாய்க்கிழமை காலை அல்பேனியாவை உலுக்கிய 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், பலரைக் காணவில்லை என்றும், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் துறையின் தரவுகள்படி, டிரானாவிலிருந்து வடமேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளூர் நேரம் அதிகாலை 4 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்த பூகம்பங்கள் 5.1 முதல் 5.4 ரிக்டர்வரையில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அல்பேனிய அதிபர் இலீர் மெட்டா இந்த சம்பவத்தை வியத்தகு முறையில் விவரித்துள்ளார்.
இதற்கிடையில், டிரானா நகரிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். வீட்டை விட்டு குதித்து தப்பிக்கும் முயற்சியில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதற்கிடையில், காயமடைந்தவர்கள் தற்போது டூரஸ், டிரானா மற்றும் துமனே ஆகிய மூன்று மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.