டிரானா: மேற்கு அல்பேனியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அட்ரியாடிக் கடலோர நகரமான டுரெஸை ஒட்டியுள்ள துமனேவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 39 என்று பாதுகாப்பு அமைச்சகம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, சுமார் 658 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், அவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
துமனே மற்றும் டுரெஸைச் சுற்றியுள்ள கிராமங்களில் அமைக்கப்பட்ட 148 கூடாரங்களில் சுமார் 2,150 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி (0254 ஜிஎம்டி) கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.54 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது.
செவ்வாயன்று துருக்கி அரசின் உதவி நிறுவனமான, துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனம் (டிக்கா), நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 உணவுப் பொட்டலங்களையும் 500 போர்வைகளையும் வழங்கியது.
நிலநடுக்கத்திற்குப் பிறகு வெளியிலிருந்துப் பெற்ற முதல் உதவி இதுவென்று குறிப்பிடப்பட்டுள்ளது.