கோலாலம்பூர்: அடுத்த வாரம் மக்களைவயில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ள காவல் துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (ஐபிசிஎம்சி) நிறுவப்படுவது குறித்த மசோதாவை எதிர்க்கட்சி ஏகமனதாக நிராகரிக்கும் என்று அதன் தலைவர் இஸ்மாயில் சப்ரி கூறினார்.
ஐபிசிஎம்சி அமைப்பதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை தேசிய முன்னணி, பாஸ், ஜிபிஎஸ் உடன்படவில்லை என்று அவர் கூறினார்.
“ஒரு சிறப்புக் குழுவால் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் கருத்து சேகரிப்பு நடத்தப்பட்டிருந்தாலும், அது வெறும் நடிப்பு மட்டுமே” என்று அவர் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டிடத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
காவல்துறை பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரின் அனைத்து பரிந்துரைகளும் ஆட்சேபனைகளும் குழுவின் பரிந்துரைகளில் பரிசீலிக்கப்படவில்லை அல்லது சேர்க்கப்படவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.
ஐபிசிஎம்சி அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நம்பும் சட்ட வல்லுநர்களின் கருத்துகள் ஏற்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
“காவல்துறையினரின் உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி நம்புகிறது. கிட்டத்தட்ட 150,000 காவல் துறையினர் மக்களுக்கும் நாட்டிற்கும் பங்களித்துள்ளனர். அவர்கள் தியாகம் செய்துள்ளனர். அவர்கள் ஆதரிக்கப்பட வேண்டும், சட்டத்தால் ஒடுக்கப்படக்கூடாது.”
“காவல்துறையின் உரிமைகள் மற்றும் நலன்களை தொடர்ந்து பாதுகாப்பதாக நாங்கள் உறுதியளிக்கிறோம். எனவே, எதிர்க்கட்சியில் இருந்து நாங்கள் அரசாங்கம் எழுப்பும் இத்திட்டத்தை நிராகரிப்போம்” என்று அவர் கூறினார்.