கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் போலி செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை பரப்புவதை திறம்பட கையாள முடியும் என்று தாம் நம்புவதாக ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.
போலி செய்திகளும் வெறுக்கத்தக்க பேச்சும் பல்லின மக்களைக் கொண்ட மலேசியாவை அழித்துவிடும் என்றும், மனித இருப்புக்கு மூன்றாவது அச்சுறுத்தலாகவும் அது அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
“மலேசியாவில், அல்லது உலகெங்கிலும், போலி செய்திகள், வெறுக்கத்தக்க பேச்சு ஆகியவை மனித இயல்புகளை வென்றுள்ளன. அதனை நாம் நிவர்த்தி செய்ய முடியும்” என்று நேற்று செவ்வாயன்று அவர் கூறினார்.
கடந்த 2017-இல் சமூக ஊடகங்களில் தம்மைப் பற்றிய போலி செய்திகள் பரவியதைச் சுட்டிக் காட்டிய அவர், இந்த பிரச்சனை மலேசியர்களிடையே பொதுவான பார்வையாக மாறியுள்ளது என்று கூறினார்.
சமீபத்திய காலங்களில், நாட்டில் இன மற்றும் மத உணர்வுகள் அதிகரித்துள்ளதாகவும், பொறுப்பற்ற கட்சிகள், சந்தர்ப்பவாதிகள் மற்றும் போலி செய்திகளை பரப்பியவர்கள் இந்த பிரச்சனையை மோசமடையச் செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.