கோலாலம்பூர்: விடுதலைப் புலிகள் குழுவுடன் தொடர்பு உள்ளதாகக் கூறி, பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) கீழ் கைது செய்யப்பட்ட காடேக் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதனை பிணையில் விடுவிக்கலாமா இல்லையா என்று இங்குள்ள உயர்நீதிமன்றம் வருகிற வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) தீர்ப்பளிக்க உள்ளது.
விடுதலைப் புலிகள் குழு தொடர்பான பொருட்களை ஆதரித்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சாமிநாதன், 34, சுங்கை புலோசிறையில்தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி, சாமிநாதனை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் ராம் கர்பால் சிங் மற்றும் அரசு துணை வழக்கறிஞர் முகமட் இஸ்கண்டார் அகமட் ஆகியோரின் வாதங்களை நேற்று செவ்வாய்க்கிழமை செவிமடுத்தார்.
முன்னதாக, பிணை விண்ணப்பத்தை வழங்கவோ அல்லது மறுக்கவோ நீதித்துறைக்கு அதிகாரம் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் நிர்வாக அமைப்பு தலையிட முடியாது என்றும் ராம் கர்பால் வாதிட்டார்.
நீதிமன்றம் பிணை வழங்குவது எளிதான விஷயம் அல்ல என்பதை தாம் ஒப்புக் கொள்வதாகவும், ஆனால், பிணை பெறுவதற்கான தனது கட்சிக்காரரின் உரிமையை மறுப்பது முறையற்றது என்று வழக்கறிஞர் கூறினார்.
“சொஸ்மாவின் கீழ் உள்ள சட்டங்கள் வேறுபட்டவை. மற்ற குற்றவியல் சட்டங்களுடன் ஒப்பிட முடியாது. பிணை அனுமதிக்கப்பட்டால், பயங்கரவாத செயல்கள் மீண்டும் மீண்டும் நடத்தப்படும் என்பதனை கற்பனை செய்து பாருங்கள்” என்று அரசு தரப்பி வழக்கறிஞர் அகமட் இஸ்காண்டார் கூறினார்.