மும்பை – ஏறத்தாழ ஒரு மாதகால இழுபறிக்குப் பின்னர் ஒரு முடிவுக்கு வந்துள்ள மகராஷ்டிரா மாநில அரசியலில், அனைவரும் எதிர்பார்த்தபடி இன்று வியாழக்கிழமை இந்திய நேரப்படி மாலை 6.40 மணியளவில் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகப் பதவியேற்றார்.
மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் ஆளுநர் முன்னிலையில் உத்தவ் தாக்கரேயும், அவரது அமைச்சர்களும் பதவியேற்றனர். சிவசேனா கட்சி சார்பில் முதல்வர் பதவியேற்கும் முதல் தலைவர் உத்தவ் தாக்கரே ஆவார்.
இந்தப் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவும் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்ட இவ்விழாவில், பதவிப் போராட்டத்தில் முதல்வர் பதவியை இழந்த பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும் கலந்து கொண்டது மகராஷ்டிரா மாநிலத்தின் அரசியல் நாகரிகத்தையும், பண்பையும் காட்டுவதாக அமைந்தது.
பட்னாவிசுக்கு மேடையில் இருக்கையும் ஒதுக்கப்பட்டு மரியாதை வழங்கப்பட்டது.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.