கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்ட ஜசெகவின் ஜி.சாமிநாதனின் ஜாமீன் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ஏற்று அனுமதி அளித்துள்ளது.
பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், ஜாமீனுக்கான விண்ணப்பத்தை நீதிமன்றம் கேட்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி விளக்கினார்.
பாதுகாப்பு மீறல் வழக்குகளில் நீதிமன்றங்களுக்கு உத்தரவாதம் வழங்குவதை தடைசெய்யும் பிரிவு 13 சொஸ்மா குறித்து அவர் குறிப்பிட்டார். அப்பிரிவு நீதித்துறை, சட்டத்துறை மற்றும் நிர்வாக அமைப்புகளுக்கு இடையில் அதிகாரங்களை பிரிக்கும் கோட்பாட்டை மீறுவதாக நஸ்லான் தீர்ப்பளித்தார்.
இந்த விதிமுறை அரசியலமைப்பை மீறுவதாகும், ஏனெனில் இது ஜாமீன் வழங்க அல்லது மறுக்க நீதிமன்றத்தின் உரிமையை மீறுவதாக இருப்பதாகவும் நீதிபதி நஸ்லான் கூறினார்.
கடந்த செவ்வாயன்று தற்காப்பு மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இருவரும் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் முடிவு தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரிவு 13 (1) கீழ் பாதுகாப்பு குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எந்த உத்தரவாதமும் வழங்கப்பட மாட்டாது என்று சொஸ்மா கூறுகிறது.