கோலாலம்பூர்: சின் பெங்கின் தகனச் சாம்பல் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்ட பிரச்சனையை சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்பினரும் மிகைப்படுத்தக்கூடாது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.
மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தலைவர் காலமாகிவிட்டதை அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
“அவர் (சின் பெங்) இறந்துவிட்டார். ஜப்பானிய மக்களைப் போலவே நிறைய பேர் நம்மை மோசமாக நடத்தினர். ஆனால், பழையதை மறந்து விடுவோம். அவரால் எதுவும் செய்ய முடியாது.”
“அவரின் தகனச் சாம்பல் மட்டுமே வந்துள்ளது. ஷாம்சியா பாகெ வந்தபோது யாரும் எதிர்க்கவில்லை. ஏன்? அவர் மலாய்க்காரர் என்பதாலா? ” என்று அவர் சியோலில் மலேசிய ஊடக செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அதே நேரத்தில் பிரதமர் இந்த விவகாரத்தில் தனிப்பட்ட சூழ்ச்சி இருப்பதற்கான வாய்ப்பை நிராகரிக்கவில்லை.
“இது என்ன வகையான விஷயம், நீங்கள் எதைப் பெற விரும்புகிறீர்கள்? யாரை திருப்திப்படுத்த விரும்புகிறார்கள்? இம்மாதிரியான சிறு விவகாரங்களைக்கூட காரணமாக வைத்து அரசாங்கத்தை குறை கூறுகிறீர்கள். இந்த விஷயங்கள் நஜிப்பின் காலத்தில் நடந்தன, ஆனால் எதுவும் கூறவில்லை. ஆனால் இப்போது எல்லாம் நம்பிக்கைக் கூட்டணிக்கு திரும்பியுள்ளது, ” என்று அவர் கூறினார்.
சின் பெங்கின் தகனச் சாம்பலை மலேசியாவிற்கு கொண்டு வருமாறு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை என்று நேற்று வியாழக்கிழமை அரசாங்கம் அறிவித்திருந்தது.