Home கலை உலகம் திரைவிமர்சனம்: “என்னை நோக்கிப் பாயும் தோட்டா” – குழப்பக் கதை; இழுவை; போரடிப்பு – தவிர்த்து...

திரைவிமர்சனம்: “என்னை நோக்கிப் பாயும் தோட்டா” – குழப்பக் கதை; இழுவை; போரடிப்பு – தவிர்த்து விடலாம்

1233
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வருடக்கணக்காக வெளியிட முடியாமல், மற்ற படங்களையும் இயக்க முடியாமல், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனை முடக்கி வைத்திருந்த “என்னை நோக்கிப் பாயும் தோட்டா” ஒரு வழியாக, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயவால் நேற்று வெள்ளிக்கிழமை திரையேறியுள்ளது.

ஆனால் பெருத்த ஏமாற்றம்! கடந்த மாதத்தில்தான் “அசுரன்” படத்தைத் தந்து உச்சத்தைத் தொட்ட தனுஷூக்கு அதலப் பாதாள சறுக்கல்.

கௌதமின் ஸ்டைலான மேக்கிங் எனப்படும் பட உருவாக்கம் ஏனோ எடுபடவில்லை. துண்டுத் துண்டான காட்சிகள், நடப்புக் காட்சிகளைக் காட்டி விட்டு பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை பின்னோக்கிச் சென்று என்ன நடந்தது என்று கூறும் குழப்பமான திரைக்கதை, அதுமட்டுமில்லாமல், படம் முழுக்க என்ன நடந்தது என ஒன்றாம் வகுப்பு மாணவனுக்குப் பாடம் எடுப்பது போல் தனுஷ் தன் குரலில் சம்பவங்களை விளக்கிக் கொண்டே இருப்பது பெரும் போரடிப்பு.

தனுஷ் – கௌதம் மேனன்
#TamilSchoolmychoice

போதாதற்கு, வசனங்களை மெதுவாகப் பேசுகிறார்கள். “நாதா, சுவாமி” என்ற தியாகராஜர் பாகவர் காலத்து சொற் பிரயோகங்கள் இல்லையே தவிர, மற்றபடி படத்தில் பல இடங்களில் அதே பாணியில் மெதுவாகப் பேசுகிறார்கள்.

தனுஷூம், மேகா ஆகாஷூம் காதலிக்கிறார்கள் என்பதை ஓரிரு காட்சிகளிலேயே காட்டிவிட்டு, அவர்கள் இருவரும் பின்னணியில் பாடல் ஒலிக்க காதலித்துக் கொண்டே இருப்பதும், படம் முழுக்க தழுவிக் கொண்டே இருப்பதும், தொடர்ந்து காதல் வசனங்களையே பேசிக் கொண்டிருப்பதும் பயங்கர போரடிப்பு.

சாதாரணமான கதை – திரைக்கதை

முதல் பாதி வரை முழுக்க, கல்லூரி மாணவன் தனுஷ், ஒரு நடிகையான மேகா ஆகாஷ் காதல் கதைதான். ஆனால், எந்தவிதத் திருப்பமும் இல்லாமல், மெதுவோட்டமாக நகர்கிறது. ஆனால், இடையிடையே இரண்டொரு முறை தனுஷ் துப்பாக்கியால் சுடப்படுகிறார். ஏன் சுடப்படுகிறேன் என்பதை பின்னணியில் வாய்மொழியாக விளக்குகிறார்.

ஓரிரு காட்சிகளில் மட்டுமே காட்ட வேண்டிய பின்னணி வசனங்களை படம் முழுக்க இறுதிக் காட்சி வரை சொல்லிக் கொண்டே இருப்பது, திரைமொழி அறிந்த கௌதம் மேனனின் ஆற்றலுக்கு இழுக்கு. அதுவே படத்தையும் போரடிக்க வைக்கிறது.

இடைவேளையில் தனுஷைப் பிரிந்து நான்கு ஆண்டுகளுக்குக் காணாமல் போகிறார், மேகா ஆகாஷ். ஆனால் பின்னர் நீண்ட நாளாக காணாமல் போன தனுஷின் அண்ணனனைப்  (சசிகுமார்) பார்த்ததாக மேகா ஆகாஷ் கூறி அவரை உடனடியாக மும்பை வரச் சொல்கிறார்.

காதலிக்காக இல்லாமல், அண்ணனுக்காக மும்பை செல்லும் தனுஷ் சந்திக்கும் பிரச்சனைகள், ஏன் அந்தப் பிரச்சனைகள் என்பதுதான் மீதிக் கதை.

கதையை இப்படி நேரடியாக நாம் சொல்கிறோமே தவிர, கௌதம் மேனன் அவ்வாறு படத்தில் கூறவில்லை.

படப்பிடிப்பின்போது தனுஷ் – கௌதம் மேனன்

அடிக்கடி, பின்னோக்கி செல்கிறது கதை. ஏகப்பட்ட குழப்பங்கள். கடைசியில் பார்த்தால், வழக்கம்போல், காவல் துறை கறுப்பு ஆடுகள், ஆயுதம் கடத்தும் குண்டர் கும்பல்கள், இவர்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய தகவல்களை ஒரு கணினியில் போலீஸ் அதிகாரி சசிகுமார் வைத்திருக்க, அதைத் தேடித்தான் இத்தனை போராட்டங்கள் என கதையை முடிக்கிறார்கள்.

படத்தின் பாராட்டத்தக்க அம்சங்கள்…

அப்படி எதுவுமே இல்லை என்பதுதான் படத்தின் தோல்விக்குக் காரணம். சித் ஸ்ரீராம் குரலில் ஒலிக்கும் “மறுவார்த்தை பேசாதே” என்ற பாடல் மட்டுமே ஆண்டுக்கணக்காக பிரபலமாகி விட்டதால் இரசிக்க வைக்கிறது.

“பேட்ட” படத்தில் ரஜினி பாதுகாக்க முனையும் கல்லூரி மாணவியாக வந்த மேகா ஆகாஷ், கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறாரே தவிர, நடிப்பைக் காட்ட போதுமான வாய்ப்பில்லை. தனுஷை அடிக்கடி கட்டித் தழுவி மருவும் வாய்ப்பைத்தான் இயக்குநர் தந்திருக்கிறார்.

தனுஷின் அண்ணனாக வரும் சசிகுமார் இடைவேளைக்குப் பின்னர் தோன்றும் போது எதிர்பார்ப்புடன் நிமிர்ந்து உட்காருகிறோம். ஆனால் அவரையும் சில காட்சிகளோடு கொன்று விடுகிறார்கள்.

ஒளிப்பதிவும், படத் தொகுப்பும் மட்டும் பாராட்டத்தக்க அளவில் இருக்கிறது. பின்னணி இசையோ, பாடல்களோ எடுபடவில்லை. காட்சிகள் நகர்ந்து கொண்டே இருக்க எல்லாப் பாடல்களும் பின்னணியிலேயே ஒலிக்கின்றன. கௌதம் மேனனின் முத்திரை பதிக்கும் மற்றப் படப் பாடல்கள் போன்று எதுவும் இதில் இல்லை.

இவ்வளவு கூறியதற்கும் பிறகு, இந்தப் படத்தைப் பார்க்காமல் தவிர்த்து விடுவது நல்லது.

இருந்தாலும், தனுஷூக்காகப் பார்ப்போம் என்றோ, கௌதம் மேனனுக்காகப் பார்ப்போம் என்றோ யாராவது கிளம்பிச் சென்றால் அவர்களுக்கு வாழ்த்துகள்!

-இரா.முத்தரசன்