Home One Line P1 அரசியல் பார்வை: அம்னோ-பாஸ் முவாபக்காட் கூட்டணி : மஇகா இணையத் துடிப்பது ஏன்? மசீச தயங்குவது...

அரசியல் பார்வை: அம்னோ-பாஸ் முவாபக்காட் கூட்டணி : மஇகா இணையத் துடிப்பது ஏன்? மசீச தயங்குவது ஏன்?

1130
0
SHARE
Ad
விக்னேஸ்வரன் – வீ கா சியோங்

கோலாலம்பூர் – (அம்னோ-பாஸ் இணைப்பில் தோற்றுவிக்கப்பட்டுள்ள முவாபக்காட் கூட்டணியில் சேர மசீச தொடர்ந்து தயக்கம் காட்டி வரும் வேளையில், மஇகாவோ அதில் இணைய சம்மதம் தெரிவித்திருக்கிறது. இதனால் இந்த இரு கட்சிகளுக்கும் ஏற்படப் போகும் சாதக-பாதகங்கள் என்ன? தனது பார்வையில் ஆராய்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

ஆளும் நம்பிக்கைக் கூட்டணிக்கு எதிராக அரசியல் கூட்டணி ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக அம்னோ-பாஸ் இணைந்து முவாபாக்காட் நேஷனல் (Muafakat Nasional) என்ற கூட்டணியை அமைத்துள்ளன.

ஆனால் இந்தக் கூட்டணியில் இணைய மசீச தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. கூட்டணி என்றால் அது தேசிய முன்னணி என்ற ஒரே கூட்டணிதான் என்ற நிலைப்பாட்டில் மசீச உறுதியாக நிற்கின்றது.

#TamilSchoolmychoice

ஆனால், முவாபக்காட் கூட்டணியில் இணைய எங்களுக்குச் சம்மதம் என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதன் மூலம், எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் தேசிய முன்னணி என்ற பெயரிலும், இன்னொரு பக்கம் முவாபக்காட் என்ற பெயரிலும் கூட்டணி அமைத்திருக்கின்றன.

இதனால், சில சாதகங்களும் இருக்கின்றன, பாதகங்களும் இருக்கின்றன.

முவாபக்காட் கூட்டணி – மசீச தயக்கம் ஏன்?

முவாபக்காட் கூட்டணி மூலம் அடுத்தடுத்து வந்த சில இடைத் தேர்தல்களில் வெற்றிக் கனியை தேசிய முன்னணி பறித்திருந்தாலும், இந்தக் கூட்டணி அடுத்த 15-வது பொதுத் தேர்தல் வரை நீடிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது.

முவாபக்காட் கூட்டணியில் இணைய மசீச தயங்கினாலும், அண்மையில் நடந்த தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாஸ் கட்சியோடு இணைந்து மசீச பரப்புரைகளை மேற்கொண்டது. அதன் காரணமாகவே, மிகப் பெரிய பெரும்பான்மையை மசீச-தேசிய முன்னணி பெற முடிந்தது என்பது கண்கூடு.

எனினும் பாஸ் கட்சியோடு அதிகாரபூர்வமாகக் கைகோர்ப்பதில் மசீச தயக்கம் காட்டுவதிலும் நியாயமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன.

முன்பு பக்காத்தான் பக்காத்தான் ராயாட் கூட்டணியில் ஜசெகவும், பாஸ் கட்சியும் இணைந்திருந்தபோது, அதைக் காரணம் காட்டி, ஜசெகவை நோக்கி பல கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கடுமையாக சாடிய கட்சி மசீச. தற்போது தனக்கும் அதே நிலை ஏற்பட்டு விடும், பாஸ் கட்சியோடு கூட்டு வைத்தால், ஜசெக கடுமையாகத் திருப்பித் தாக்கும் என மசீச அஞ்சுகிறது.

இடைத் தேர்தல்கள் என்பது வேறு! பொதுத் தேர்தல் என்பது வேறு!

-என்ற அரசியல் சித்தாந்தத்தை மசீச போன்ற நீண்ட நெடிய வரலாறு கொண்ட கட்சிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன.

தஞ்சோங் பியாய் போன்ற இடைத் தேர்தலில் வெல்வதற்கு பாஸ் கட்சியின் ஒத்துழைப்பு உதவலாம். ஆனால், பொதுத் தேர்தல் என்று வரும்போது, பாஸ் கட்சியோடு உறவு வைத்தால், மசீசவுக்கு தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் வழங்கப்பட்ட, அதே போன்ற ஆதரவை சீன சமுதாயத்தினர் தொடர்ந்து வழங்குவார்களா அல்லது எப்போதும்போல் மீண்டும் ஜசெக பக்கம் சாய்வார்களா என்பது ஆராயப் பட வேண்டிய கேள்வி!

அதே சமயம் அடுத்த பொதுத் தேர்தலில் தாங்கள் போட்டியிடும் இடங்களில் பாஸ் கட்சியின் ஒத்துழைப்பு இருந்தால் எளிதாக வெற்றி பெற முடியும் என்பதையும் மசீச உணர்ந்தே இருக்கிறது.

அதனால்தான், பாஸ் விவகாரத்தில், மசீச இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கிறது.

அம்னோவின் வியூகம் : சபா, சரவாக்கிற்கு ஒரு கூட்டணி – தீபகற்ப மலேசியாவுக்கு ஒரு கூட்டணி

முவாபக்காட் கூட்டணியை அமைத்திருப்பது அம்னோவின் புத்திசாலித்தனமான வியூகமாகப் பார்க்கப்படுகிறது. காரணம், சபா, சரவாக் மாநிலங்களில் மக்களுக்கு நன்கு அறிமுகமான – குறிப்பாக அந்த இரு கிழக்கு மலேசிய மாநிலங்களில் உள்ள பூர்வ குடியினருக்கு நன்கு பழக்கமான – தேசிய முன்னணி சின்னத்தைப் பயன்படுத்தும் அதே வேளையில் முவாபக்காட் கூட்டணி தீபகற்ப மலேசியாவில் மட்டும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபா, சரவாக் மாநில மக்கள் – அங்குள்ள தீவிர முஸ்லீம்களைத் தவிர்த்து – பாஸ் கட்சியின் வருகையை அவ்வளவாக வரவேற்கவில்லை. அதிலும், பொதுவாகவே தீபகற்ப மலேசியாவைப் தலைமைப் பீடமாகக் கொண்ட அரசியல் கட்சிகள் என்றால் சபா, சரவாக் மாநிலங்கள் அவற்றை எட்டிக் காயாகத் தவிர்த்து விடுகின்றனர்.

எனவே, தீவிரவாத இஸ்லாமியக் கட்சியாகப் பார்க்கப்படும் பாஸ் கட்சியோடு இணைந்து தேசிய முன்னணி செயல்பட்டால், அதனால், சபா, சரவாக் மாநிலங்களில் பாதிப்பே விளையும். இதனைக் கருத்தில் கொண்டுதான் தீபகற்ப மலேசியாவில் முவாபக்காட் கூட்டணி என்பதை முன் நிறுத்தியும், சபா, சரவாக் மாநிலங்களில் தேசிய முன்னணியை முன் நிறுத்தியும் அம்னோ அரசியல் காய்களை நகர்த்தத் திட்டம் கொண்டுள்ளது.

ஆனால், தேசிய முன்னணியில் அதிகாரபூர்வமாக பாஸ் இணைந்து விட்டால், அதன் பின்னர், எல்லா அரசியல் ஆரூடங்களும், வியூகங்களும் முற்றாக மாறிவிடும்.

அதன்பின்னர், முவாபக்காட் என்ற கூட்டணி பின்னுக்குத் தள்ளப்பட்டு, தேசிய முன்னணி கூட்டணி ஒன்றே முன் நிறுத்தப்படும்.

அவ்வாறு பாஸ் தேசிய முன்னணி இணைய வேண்டுமென்றால், அதற்கு மசீச சம்மதிக்க வேண்டும். ஏற்கனவே, அம்னோவும், மஇகாவும் சம்மதித்து விட்டன. இப்போது மசீசவும் சம்மதித்து விட்டால், தேசிய முன்னணியில் பாஸ் இணையலாம்.

ஆனால், அவ்வாறு இணைவதற்கு பாஸ் கட்சியும் தயக்கம் காட்டுகிறது, தனது முக்கியத்துவத்தை இழந்து விடுவோமா என்று!

மஇகாவுக்கு பெரும் சாதகம்

விக்னேஸ்வரன் மஇகாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றது முதற்கொண்டு தொடக்கம் முதலே பாஸ் கட்சியோடு இணைந்து அரசியல் களமாடுவதற்கு மஇகா ஆர்வம் காட்டி வருகிறது.

அம்னோ ஒரு பக்கம் பாஸ் கட்சியோடு பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருந்த தருணத்திலேயே, மஇகா, அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில், பாஸ் தலைவர்களோடு விருந்துகளையும், சந்திப்புகளையும் நடத்தி நெருக்கமானது.

பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்போ, முவாபக்காட் கூட்டணியோ – எந்தப் பெயரில் நீங்கள் அழைத்தாலும், அத்தகைய இணைப்பால் மஇகாவுக்கு நிறைய சாதகங்களே விளையப் போகின்றன.

அதனால்தான் அந்தக் கூட்டணியில் இணைய மஇகா தயார் என விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார் எனக் கருதப்படுகிறது.

இந்த இணைப்பால் ஏற்படப் போகும் சில உதாரணங்களைப் பார்ப்போம்!

கடந்த பொதுத் தேர்தலில் மஇகா போட்டியிட்டு தோல்வியடைந்த சில தொகுதிகளின் தற்போதைய அரசியல் சூழலில் எவ்வாறு மாறும் என்பதைப் பார்ப்போம்!

காப்பார் நாடாளுமன்றத் தொகுதி

credit : Undi.info

காப்பார் தொகுதியில் பிகேஆர் கட்சி 47,731 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. ஆனால், அங்கு போட்டியிட்ட பாஸ் 31,425 வாக்குகள் பெற்ற நிலையில், மஇகா-தேசிய முன்னணி, 26,412 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. அதாவது தேசிய முன்னணி வேட்பாளரை விட 5,013 வாக்குகள் கூடுதலாகப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது பாஸ்.

அடுத்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி காப்பார் தொகுதியில் போட்டியிடாமல் தேசிய முன்னணிக்கோ, மஇகா வேட்பாளருக்கோ ஆதரவு கொடுத்தால் அந்தக் கூட்டணி மட்டுமே உத்தேசமாக 57,837 (31,425 + 26,412) வாக்குகளைப் பெற முடியும்.

சுங்கை சிப்புட் தொகுதி

அடுத்த பொதுத் தேர்தலில் மஇகா தலைவர் விக்னேஸ்வரன் போட்டியிடுவார் என ஆரூடம் கூறப்படும் பேராக் மாநிலத்தின் சுங்கை சிப்புட் தொகுதியை எடுத்துக் கொள்வோம்.

பிகேஆர் சுங்கை சிப்புட் தொகுதியில் 20,817 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. மஇகா-தேசிய முன்னணி 15,210 வாக்குகள் பெற்றது. பாஸ் கட்சியோ 5,194 வாக்குகள் பெற்றது. ஆக பாஸ், தேசிய முன்னணி வாக்குகளைச் சேர்த்தால் 20,404 (15,210 + 5,194) வாக்குகள் வருகின்றன.

இது, பிகேஆர் பெற்ற மொத்த வாக்குகளை விட, 413 வாக்குகள் மட்டுமே குறைவாகும். அதே சமயத்தில் இங்கு பிஎஸ்எம் கட்சி சார்பில் போட்டியிட்ட மைக்கல் ஜெயகுமார் 1,505 வாக்குகள் பெற்றார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆக, பிகேஆர் கட்சியை விட, அதனை எதிர்த்து நின்ற கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்குகள் 21,909 ஆகும். இது தொகுதியில் வெற்றி பெற்ற பிகேஆர் கட்சி பெற்ற வாக்குகளை விட 1,092 வாக்குகள் கூடுதலாகும்.

மஇகா போட்டியிட்ட மற்றொரு தொகுதியான உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் 14-வது பொதுத் தேர்தல் முடிவுகள்

இந்த கணக்குப்படி, பாஸ்,அம்னோ ஒத்துழைப்போடு சில தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளை மஇகா பெற்றால், அந்தத் தொகுதிகளில் மஇகா எளிதாக வெற்றி வாகை சூடும்.

இதுவே, மஇகாவுக்கு இருக்கும் சாதகம்! அதனால்தான் முவாபக்காட் கூட்டணியை நாடுகிறது மஇகா!

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெறப் போவது, முவாபக்காட் கூட்டணியா அல்லது தேசிய முன்னணியா அல்லது நம்பிக்கைக் கூட்டணியா என்ற ஆரூடத்திற்குள் போவதற்கு முன்னால்,

15-வது பொதுத் தேர்தலின் எந்தக் கூட்டணி வெற்றி பெறப் போகிறது என்பதை நிர்ணயிக்கப் போவது மலேசிய அரசியல் களத்தில் இன்னும் சோதிக்கப்படாத ஒரு முக்கிய அம்சமாகும்.

15-வது பொதுத் தேர்தலுக்குள் புதிய வாக்காளர்களாக உருவாகப் போகும் 18 வயதுக்கும் மேற்பட்ட இளைய சமுதாயத்தின் அரசியல் சிந்தனைப் போக்கும் – எண்ண ஓட்டங்களும் – வாக்குச்சாவடிகளில் அவர்கள் எடுக்கப் போகும் முடிவுகளும்தான்,

அடுத்த பொதுத் தேர்தலின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும்.

-இரா.முத்தரசன்