கோலாலம்பூர்: மலேசிய சீலாட் போட்டியாளர் பைசுல் நாசிர் பிலிப்பைன்ஸில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டியில், களத்தில் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் போது, மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் போது, உபசரணை நாடான பிலிப்பைன்ஸ் நாட்டினைப் பிரதிநிதித்துவப்படுத்திய டைன்ஸ் டுமானால் பைசுலின் முகத்தில் உதைத்ததை அடுத்து அவர் கீழே விழுந்து மயக்கமடைந்தார்.
அவரால் போட்டியைத் தொடர முடியாததால், அவரது எதிரிக்கு வெற்றி வழங்கப்பட்டது.
மலேசியாவின் சிறந்த சீலாட் போட்டியாளர்களில் ஒருவரான பைசுல், 2015-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த சீ விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூரிலும் அதே சாதனையை அவர் படைத்தார்.
இந்தோனிசியாவில் நடைபெற்ற 2018-ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் வெள்ளி வென்றார்.