கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் பாலியல் புகார் சுமத்தியுள்ளார்.
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி மீதான ஓரினச் சேர்க்கை காணொளி வெளியிடப்பட்டு 6 மாதங்கள் ஆகியும், இன்னும் அதன் மீதான புலனாய்வுகள் முடிவடையாத நிலையில் இந்தப் புதியக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
அன்வாரின் முன்னாள் ஆய்வு உதவியாளரான முகமட் யூசுப் ராவுத்தர் என்பவர் நவம்பர் 19 தேதியிட்ட சத்தியப் பிரமாணத்தின் வழி இந்தப் புகார்களைச் சுமத்தியுள்ளார் என மலேசியாகினி செய்தி ஒன்றில் தெரிவித்தது. எனினும் அந்த ஆவணத்தின் உண்மைத் தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் மலேசியாகினி தெரிவித்தது.
நாளை வியாழக்கிழமை மலாக்காவில் பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு தொடங்கவுள்ள வேளையில் இந்தப் புதிய பாலியல் புகார் விவகாரம் எழுப்பப்பட்டுள்ளது.
இந்தப் புகாரை உடனடியாக மறுத்துள்ள அன்வாரின் அரசியல் செயலாளர் பார்ஹாஷ் வாஃபா சல்வாடோர் ரிசால் முபாராக், யூசுப்பின் இந்த முயற்சியின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டிருப்பவர் பிகேஆர் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் பட்ருல் ஹிஷாம் சஹாரின் என்றும் இது கட்சியின் தோற்றத்தைக் கெடுக்க எடுக்கப்பட்டிருக்கும் பலவீனமான செயல் என்றும் சாடியிருக்கிறார்.
பெயர் குறிப்பிடப்படாத ஓர் இடத்தில் நடந்ததாகக் கூறப்படும் பத்திரிகையாளர் சந்திப்பில் யூசுப் தனது சத்தியப் பிரமாணத்தை வெளியிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து புதிதாகத் திறக்கப்பட்ட முகநூல் பக்கம் ஒன்றில் யூசுப்பின் 8 நிமிட பத்திரிகையாளர் சந்திப்பு காணொளி பதிவேற்றப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் அந்தக் காணொளி பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே, கடந்த மே 16-ஆம் தேதி அன்வார் இப்ராகிம் அலுவலகத்தில் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தான் செய்த புகார் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது என தனது காணொளியில் யூசுப் கூறியிருக்கிறார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி சிகாம்புட்டில் உள்ள அன்வார் இல்லத்தில் தான் தகாத முறையில் பாலியல் முறைகேடுகளுக்கு அன்வாரால் உட்படுத்தப்பட்டதாகவும், அவர் தன்னிடம் தகாத உறவுக்கு கோரிக்கை வைத்ததாகவும் யூசுப் புகார் கூறியிருக்கிறார்.
அந்தக் குறிப்பிட்ட சம்பவம் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த நான்காவது நாள் நிகழ்ந்தது என்றும் யூசுப் புகாரில் தெரிவித்துள்ளார்.
அன்வார் தனது நெருங்கிய குடும்ப நண்பர் என்றும் யூசுப் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நடந்ததாகக் கூறப்படும் அக்டோபர் 2-ஆம் தேதி சம்பவம் குறித்து இதுவரையில் காவல் துறையில் எந்தப் புகாரும் செய்யப்படவில்லை என புக்கிட் அமான் குற்றவியல் பிரிவு இயக்குநர் ஹூசிர் முகமட் தெரிவித்துள்ளார்.