கோலாலம்பூர்: எவ்வித பிரச்சனைகளும் இன்றி அதிகாரத்தை அமைதியான முறையில் மாற்றி வழிநடத்துவது, நாட்டின் நாடாளுமன்ற மற்றும் அரசியலமைப்பு ஜனநாயக அமைப்புகள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருவதை பிரதிபலிப்பதாக பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
மலேசிய நாடாளுமன்றம், ஒரு ஜனநாயக நிறுவனமாகவும், மக்களின் குரல் மற்றும் சக்தியின் அடையாளமாகவும் நிலை நிறுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
இது ஒரு பெரிய சாதனை மட்டுமல்ல, அரசாங்கம் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி, மக்களின் குரல் புனிதமானது என்று நம்பும் வரை அதை பராமரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
“அரசை நிர்மாணிக்கும் பங்கு வேறு கட்சிக்கு மாற்றப்பட்டிருந்தாலும், ஜனநாயகத்தின் மரபுகள் மற்றும் நடைமுறைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன” என்று மலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகால விருந்து நிகழ்ச்சியில் நேற்றிரவு புதன்கிழமை அவர் குறிப்பிட்டார்.
நம்பிக்கைக் கூட்டணி பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒரு வருடத்திற்கும் மேலாவதால், இந்த கொண்டாட்டமும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களின் நலன்களைப் பொருட்படுத்தாமல் ஆட்சி செய்ய முடியாது என்று டாக்டர் மகாதீர் எச்சரித்தார்.
“அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது தனிப்பட்ட இலாபத்திற்காக செயல்பட்டால், கடந்த தேர்தலில் நாம் கண்டது போல அரசாங்கம் தண்டிக்கப்படும்” என்று அவர் கூறினார்.