கோலாலம்பூர் – மலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நேற்று புதன்கிழமை 4 டிசம்பர் 2019-ஆம் நாள் நடந்த சிறப்பு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில், பிரதமர் துன் மகாதீர் தம்பதியர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், துணைப் பிரதமர் வான் அசிசா, மசீச தலைவர் வீ கா சியோங், நாடாளுமன்ற மேலவைத் தலைவரும் மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மக்களவைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அரிப் அரிப் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மலேசிய நாடாளுமன்றம் பல வரலாற்று சம்பவங்களைக் கண்டிருக்கிறது என்றும் நமது நாட்டின் நிர்வாக அமைப்பு முறையில் மிக முக்கியமான ஜனநாயக அமைப்பாகத் தொடர்ந்து செயல்பட்டு மலேசிய நாடாளுமன்றம் வெற்றி கண்டிருக்கிறது என்றும் கூறினார்.
மலேசிய நாடாளுமன்றத்தையும், மேலவையையும் நடைமுறையில் சீரமைக்கும் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் 9 பரிந்துரைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் விக்னேஸ்வரன் தனதுரையில் தெரிவித்தார்.
மலேசிய நாடாளுமன்ற மேலவை தனது முதல் கூட்டத்தை 11 செப்டம்பர் 1959-ஆம் நாள் நடத்தியது.
நாடாளுமன்ற சீர்திருத்தங்களுக்கான குழுவை அமைத்ததற்காக பிரதமர் துன் மகாதீர் முகமட்டுக்கும் அமைச்சரவைக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட விக்னேஸ்வரன், “நாடாளுமன்ற மேலவைக்கான சீர்திருத்தம் என்பது நாடாளுமன்றக் கட்டமைப்பை, உள்அமைப்பை மாற்றியமைக்கும் நோக்கம் கொண்ட முயற்சியல்ல. மாறாக, அதன் முழு பலத்தையும், பலனையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் ஒரு முயற்சியே ஆகும். இதன் மூலம் நாடாளுமன்ற மேலவை இனிவரும் காலங்களில் மக்களவை முடிவுகளை மறுபரிசீலனை செய்யும், சமன்படுத்தும் ஓர் அமைப்பாக மேலும் திறம்பட செயலாற்ற முடியும்” என்றும் கூறினார்.
மலேசிய நாடாளுமன்றத்தின் 60-ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்களின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்.
விக்னேஸ்வரன் ஆற்றிய முழு உரையின் தமிழ் வடிவத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் படிக்கலாம்:
மலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை