‘இம்பீச்மெண்ட்’ (impeachment) என்பது ஓர் அமெரிக்க அதிபர் முறைதவறி நடந்து கொண்டாலோ, அவரது நடத்தைகள் அவர் மீதான நம்பகத் தன்மையை இழக்கச் செய்யும் விதத்தில் இருந்தாலோ, நாடாளுமன்றத்தில் அவர் மீது தீர்மானம் கொண்டு வரப்பட்டு விசாரணைகள் நடைபெறும்.
விசாரணையில் அந்த அதிபர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவரது பதவி பறிக்கப்படும்.
அந்த வகையில் டிரம்ப் மீதான விசாரணைக்கு அமெரிக்க மக்களவைத் தலைவர் நான்சி பெலோசி அனுமதி அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் நீதிக்குழு டிரம்பின் நம்பகத் தன்மை மீதான விசாரணைக்கான நடைமுறைகளை இனி வரையறுக்கும்.
அடுத்ததாக, இந்த விசாரணையை முழு மக்களவையின் முன் கொண்டுவருவதா என்ற வாக்கெடுப்பு நடைபெறும்.
முழு மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பெரும்பான்மை வாக்குகளில் டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அடுத்து அந்தத் தீர்மானம் செனட் மன்றம் எனப்படும் நாடாளுமன்ற மேலவைக்குக் கொண்டு செல்லப்படும்.
அதன் பின்னர் அமெரிக்க செனட் டிரம்ப்பை பதவியிலிருந்து அகற்றுவதா இல்லையா என்ற முடிவை எடுக்கும்.
எனவே, இன்று தொடங்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற நடைமுறை டிரம்பின் பதவி பறிப்பில் வந்து முடியுமா என்ற பரபரப்பு அமெரிக்கா முழுவதும் எழுந்துள்ளது.