பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த இடைத் தேர்தலின் முடிவுகள் இன்று திங்கட்கிழமை எண்ணப்பட்டு அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆக கடைசியாக எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 15 தொகுதிகளில் 6 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு, கர்நாடகாவில் ஆட்சியமைத்து 4 மாதங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று அறிவிக்கப்பட இருக்கும் முடிவுகளைப் பொறுத்து அவர் மீண்டும் ஆட்சியில் இருப்பாரா இல்லையா என்று தெரிந்துவிடும்.
கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி, கர்நாடகாவின் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. முன்னதாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் – மஜத அரசிலிருந்து, அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக பக்கம் சாய்ந்தனர். அதனைத் தொடர்ந்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகள் காலி என அறிவிக்கப்பட்டு, இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
குறைந்த பட்சம் ஏழு இடங்களில் வெற்றியடைந்தால்தான் பாஜக, ஆட்சியை மீண்டும் தக்கவைக்கும்.