கோலாலம்பூர்: சபாவின் துவாரானைச் சேர்ந்த மூன்று மாத மலேசியக் குழந்தைக்கு போலியோ கிருமி தொற்று ஏற்பட்டதற்கான காரணம் சபாவுக்கு வெளியில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.
நாட்டில் கடந்த 27 ஆண்டுகளில் வெற்றிகரமாக அழிக்கப்பட்ட போலியோ கிருமி, பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து அல்லது குழந்தையின் குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தபோது வந்திருக்கலாம்.
ஆயினும், அக்குழந்தையின் குடும்பத்திற்கு முந்தைய வெளிநாட்டுப் பயண வரலாறு இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் கூறினார்.
“இதுவரை சபாவுக்கு வெளியில் இருந்து வந்திருக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, ஏனெனில் அவர்களுக்கு வெளிநாட்டில் வரலாறு இல்லை. இது சபாவுக்கு வரும் வெளிநாட்டினரால் கொண்டு வரப்பட்ட கிருமியாக இருக்கலாம், ”என்று அவர் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
அக்குழந்தை இரண்டாவது தடுப்பூசி பெறுவதற்கு முன்பு அந்த குருமி இருப்பதன் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியதாக டாக்டர் சுல்கிப்ளி கூறினார்.