Home அரசியல் இப்ராகிம் அலி வரம்பு மீறி நடந்து கொள்கின்றார் – சார்ல்ஸ் சாண்டியகோ எச்சரிக்கை

இப்ராகிம் அலி வரம்பு மீறி நடந்து கொள்கின்றார் – சார்ல்ஸ் சாண்டியகோ எச்சரிக்கை

672
0
SHARE
Ad

Charles-Santiago-Sliderஜனவரி 22 – “மலாய்க்காரர்கள் ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் பைபிள்களை எரிக்க வேண்டும்” என்று கூறியிருப்பதன் மூலம் பெர்காசா அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இப்ராகிம் அலி வரம்பு மீறி நடந்து கொண்டுள்ளார்” என ஜனநாயக செயல் கட்சியின் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் சாண்டியகோ (படம்) குற்றம் சாட்டியுள்ளார்.

மலாய்க்காரர்களை ஒரு குற்றம் செய்வதற்கு இப்ராகிம் அலி தூண்டியுள்ளார் என்று கூறிய சார்ல்ஸ், இப்ராகிம் அலியின் பேச்சு தேசநிந்தனைக்குரிய ஒரு குற்றம் என்பதுடன், பல இன நாடான மலேசியாவில் வன்முறையைத் தூண்டுவதற்கும் ஒப்பானதாகும் என்றும் கூறினார்.

“ஏற்கனவே அரசியலால் பிளவு பட்டிருக்கும் நாட்டை மேலும் பிளவுபடுத்தும் வண்ணம் அவரது பேச்சு அமைந்திருக்கின்றது. தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் இனவாதப் பிரச்சனையை உபயோகித்து அதன் மூலம் அச்சம் ஏற்படுத்தும் கலாச்சாரத்தை பெரிதாக்கி தங்களை ஆட்சிக் கட்டிலில் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றது” என சார்ல்ஸ் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மலாய்க்காரர்களுக்கும் மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கும் இடையில் பிரிவினையை உருவாக்க முயலும் இப்ராகிம் அலி, ஆனால் இதன் மூலம் மலாய்க்காரர்களை தனது கோமாளித்தனமான நடவடிக்கைகளால் மேலும் சிறுமைப்படுத்தியுள்ளார் என்றும் சார்ல்ஸ் தெரிவித்தார்.

அரசாங்கத் தலைமை வழக்கறிஞரின் அதிர்ச்சி தரும் அறிவிப்பு

“இப்ராகிம் அலி கூறியதை விட அதிர்ச்சி தருவது என்னவென்றால், ஒரு பைபிள் எரிக்கப்பட்டால்தான் அல்லது அவர் மீது புகார் ஒன்று காவல் துறையில் மேற்கொள்ளப்பட்டால்தான் தன்னால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் இப்ராகிம் கூறியுள்ளதை வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அப்துல் கனி பட்டேல் கூறியிருப்பதுதான். இது அரசாங்க சேவையில் உள்ளவர்கள் ஆளும் கட்சியில் உள்ளவர்களுக்கு ஆதரவாக கடைப்பிடித்து வரும் இரட்டை வேட நடைமுறையை பிரதிபலிப்பதாக இருக்கின்றது. நாட்டில் இனக்கலவரத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தக் கூடிய இத்தகைய அறிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும் சார்ல்ஸ் வலியுறுத்தினார்.

இனங்களுக்கிடையில் வெறுப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை இப்ராகிம் அலி நிறுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்ட சார்ல்ஸ் அதே வேளையில், இப்ராகிம் அலி இதுவரை பேசியுள்ள வன்முறை தூண்டும் பேச்சுக்கள் குறித்து ஆராய்ந்து அவர் மீது அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் கனி பட்டேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சார்ல்ஸ் சாண்டியகோ அறைகூவல் விடுத்துள்ளார்.

மலேசியாகினி இணையத் தள பத்திரிக்கைக்கு இன்று எழுதியுள்ள ஒரு கட்டுரையில் சார்ல்ஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.