கோலாலம்பூர்: டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு வழிவிடும் வகையில், பிரதமர் பதவியிலிருந்து விலகுவதை மீண்டும் பிரதமர் மகாதீர் முகமட் நேற்று செவ்வாயன்று உறுதிபடுத்தினார்.
அண்மையில் பிகேஆர் கட்சி தலைவரான அன்வார் மீது பாலியல் முறைகேடு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், ராய்ட்டர்ஸுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 94 வயதான பிரதமர், அடுத்த ஆண்டு நவம்பரில் மலேசியா ஏற்று நடத்த இருக்கும் ஆசிய–பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபிஇசி) உச்சமாநாட்டிற்கு முன்னர் தாம் பதவி விலகப் போவதில்லை என்பதைத் தெரிவித்துள்ளார்.
“நான் உறுதியளித்தேன், அதை நான் செய்வேன், ஆனால் ஏபிஇசி மாநாட்டுக்கு முன்பதாக விலகுவது பிரச்சனைகளை உருவாக்கும். எனக்குத் தெரிந்தவரை, நான் பதவி விலகி அவரிடம் (அன்வார்) பதவியைக் கொடுப்பேன். மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அது அவர்களின் விருப்பம். ஆனால், நான் வாக்குறுதி அளித்தபடி விலகுவேன். அவர் என்ன குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும் சரி.” என்று அவர் கூறினார்.