கோலாலம்பூர்: ஓய்வூதிய அறக்கட்டளை நிதியிலிருந்து கடன் வாங்கிய 4 பில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிதி காணாமல் போய்விட்டது என்ற அரசு தரப்பின் அறிக்கையை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மறுத்தார்.
குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், என்ன நடந்தது என்பதை அறியவும் தாம் விரும்புவதாக நஜிப் கூறினார்.
நஜிப்பிற்கு எதிரான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் விசாரணையில், அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸின் குறுக்கு விசாரணைக்கு அவர் பதிலளித்தபோது இவ்வாறு கூறினார்.
பணத்தின் நிலையை உறுதிப்படுத்த 2015-ஆம் ஆண்டில் அப்போதைய துணை நிதியமைச்சர் அகமட் ஹுஸ்னி ஹனாட்ஸ் சுவிட்சர்லாந்திற்கு செல்வதைத் தடுப்பதன் மூலம் இழப்பை ஈடுகட்ட முயற்சித்ததை நஜிப் மறுத்துள்ளார்.
1எம்டிபி தூதுக்குழு ஏற்கனவே அங்கு இருந்தததாலும், அவர்களின் அறிக்கையில் திருப்தி அடைந்ததாலும், ஹுஸ்னி சுவிட்சர்லாந்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்று நஜிப் வலியுறுத்தினார்.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிதிகளில் 42 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஏழு பண மோசடி, நம்பிக்கை மீறல் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டுகளுக்கு நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி முன் இந்த வழக்கு விசாரணைக்கு உட்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஒரு விசாரணையில், சுவிட்சர்லாந்தில் எஸ்ஆர்சி இண்டர்நேஷனலின் நிதியை மீட்டெடுப்பதைத் தடுக்க நஜிப் முயற்சித்ததாக ஹுஸ்னி கூறினார். ஹுஸ்னி கடந்த 2009-இல் இரண்டாம் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு 2016-ஆம் ஆண்டுஜூன்மாதம்பதவி விலகினார்.
அமைச்சரவை மறுசீரமைப்பில் ஹுஸ்னியை வேறொரு அமைச்சகத்திற்கு மாற்ற நஜிப் விரும்பியதாகக் கூறப்படுகிறது, ஆனால் ஹுஸ்னி இந்த வாய்ப்பை நிராகரித்தார்.
அக்டோபர் 2016-இல், சுவிட்சர்லாந்து அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம் (ஒஏஜி), எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட ஒரு பரிவர்த்தனை குறித்து விசாரிப்பதை உறுதிப்படுத்தியது.
“பெறப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர், சுவிஸ் நிதித்துறை சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை ஒஏஜி அடையாளம் கண்டது. ஆரம்பத்தில், எஸ்ஆர்சி நிதிகளால் இயற்கை வளங்களில் செய்யப்பட்ட 800 மில்லியன் அமெரிக்க டாலர் (3.3 பில்லியன் ரிங்கிட்) முதலீட்டுத் தொகை திசை திருப்பப்பட்டதாகத் தெரிகிறது.”
“இரண்டாவதாக, எஸ்ஆர்சி மற்றும் 1எம்டிபி நிதிகள் இரண்டையும் தவறாகப் பயன்படுத்தபடுவதை மறைக்க ‘போன்ஸி‘ மோசடி திட்டம் உருவாக்கப்பட்டது என்று சந்தேகிக்கப்படுகிறது,” என்று ஓஏஜி தெரிவித்திருந்தது.