Home One Line P1 “இந்திய சமூகத்தை மேம்படுத்த அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை!”- டத்தோ டி.மோகன்

“இந்திய சமூகத்தை மேம்படுத்த அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை!”- டத்தோ டி.மோகன்

1003
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்திய சமூகத்திற்காக நம்பிக்கைக் கூட்டணி வாக்களித்தபடி பயனான திட்டங்களை இதுவரை மேற்கொள்ளவில்லை எனவும், இந்திய சமுதாயத்தை உண்மையிலேயே மேம்படுத்தும் நோக்கம் அதற்கு இல்லை என்றும் 2020 வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது நாடாளுமன்ற மேலவையில் உரையாற்றிய மஇகா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

“14-வது பொதுத் தேர்தல்களின் போது இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக பல்வேறு வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன. ஆனால், ஓர் இந்தியன் என்னும் முறையில் 2020 வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியைப் பார்க்கும் போது நம்பிக்கைக் கூட்டணி இந்தியர்களுக்காக வழங்கிய வாக்குறுதிகளைக் கொஞ்சம் கூட பிரதிபலிக்கவில்லை.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியர்களுக்காக சிறுவணிகத் திட்டமான தெக்குன் நேஷனல் வழி 20 மில்லியன் ரிங்கிட் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் அப்போதைய தேசிய முன்னணி அரசாங்கம் ஆண்டுக்கு 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை தெக்குன் நேஷனல் திட்டத்திற்காக ஒதுக்கியது.” என்பதை மோகன் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

அமானா இக்தியார் மலேசியா திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித நிதியையும் இந்தியர்களுக்காக அரசாங்கம் ஒதுக்கவில்லை என்றும், கடந்த 2017, 2018 ஆண்டுகளில் முறையே 150 மில்லியன் மற்றும் 200 மில்லியன் நிதி ஒதுக்கீடுகள் அப்போதைய வரவு செலவுத் திட்டங்களில் சேர்க்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

இது மிகவும் கவலைக்குரியது என்றும், இந்தியர்களின் எதிர்கால வளர்ச்சியும் முன்னேற்றமும் மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் மோகன் கூறினார். இது சம்பந்தமான அமைச்சர் இதற்கான விளக்கத்தைத் தருவார் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

முன்னதாக கல்வி துணையமைச்சர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது இந்திய மாணவர்களுக்கு எஸ்பிஎம் தேர்வுகளுக்குப் பின்னர் போதுமான மெட்ரிகுலேஷன் இடங்கள் ஒதுக்கப்படும் என அறிவித்தார். இந்திய மாணவர்கள் தங்களின் மேற்கல்வி வாய்ப்புகளைத் தொடர்ந்து பெறுவதற்கு மெட்ரிகுலேஷன்ஸ் இடங்கள் மிகவும் முக்கியமாகும்.”

மலேசிய இந்திய புளுபிரிண்ட் திட்டத்தின் வழி 2018-ஆம் ஆண்டுக்கு இந்திய மாணவர்களுக்கு 2200 மெட்ரிகுலேஷன்ஸ் இடங்கள் வழங்கப்பட்டது. இது மொத்த இடங்களில் ஏறத்தாழ 10 விழுக்காடாகும். அப்போதே பல நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் இது போதாது, மிகவும் குறைவு என்று குறைக் கூறினர். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்களின் (நம்பிக்கைக் கூட்டணி) ஆட்சியில் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.” என்று அவர் சாடினார்.

இதனிடையே, 2018-ஆம் ஆண்டில் 1,804 இடங்கள் மட்டுமே மெட்ரிகுலேஷனுக்காக இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், 2019-ஆம் ஆண்டில் 1,212 இடங்கள் மட்டுமே இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.