Home One Line P1 “10 ஆண்டுகளில் 4 பில்லியன் – என்னவாயிற்று வேதமூர்த்தியின் அறிவிப்பு?” நாடாளுமன்ற மேலவையில் டி.மோகன் கேள்வி

“10 ஆண்டுகளில் 4 பில்லியன் – என்னவாயிற்று வேதமூர்த்தியின் அறிவிப்பு?” நாடாளுமன்ற மேலவையில் டி.மோகன் கேள்வி

968
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அடுத்த 2020 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்களில் கலந்து கொண்டு, நாடாளுமன்ற மேலவையில் உரையாற்றிய மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் (படம்), பக்காத்தான் அரசாங்கம் இந்தியர் மேம்பாட்டுக்கென அறிவித்த அடுத்த பத்தாண்டுகளுக்கான 4 பில்லியன் நிதி ஒதுக்கீடு என்னவாயிற்று என கேள்வி எழுப்பினார்.

இந்தியர்களின் சமூக, பொருளாதார மேம்பாடு

“முன்பு செடிக் என இயங்கி வந்த மலேசிய இந்தியர்களுக்கான உருமாற்ற இலாகா தற்போது மித்ரா என்ற பெயரில் இயங்கி வருவதோடு அதற்காக 100 மில்லியன் நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த தேசிய முன்னணி அரசாங்கமும் இதே தொகையைத்தான் செடிக் மூலம் வழங்கி வந்தது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த 2018 ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஒற்றுமைத் துறை அமைச்சர் (பொன்.வேதமூர்த்தி)  இந்திய சமுதாயத்தை மேம்படுத்துவதற்காக அடுத்த பத்தாண்டுகளில் 4 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பை விடுத்தார். இதன்படி பார்த்தால் இந்திய சமுதாயத்திற்கு ஆண்டுக்கு 400 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 100 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய 300 மில்லியன் ரிங்கிட் எங்கே?” எனவும் டி.மோகன் கேள்வி எழுப்பினார்.

இதையெல்லாம் ஏன் நான் கேட்கிறேன் என்றால் இதுபோன்ற உதவிகள் இந்திய சமூகத்திற்கு தற்போது பெரிதும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றன என்றும் மோகன் வலியுறுத்தினார்.

நாடற்ற இந்தியப் பிரஜைகளின் நிலைமை என்ன?

#TamilSchoolmychoice

“அதே வேளையில் நாட்டில் 300,000 பேர் நாடற்ற பிரஜைகளாக இருக்கிறார்கள் என இதே பக்காத்தான் கூட்டணி தலைவர்கள் அன்று குறைகூறி வந்தனர். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் 100 நாட்களில் இந்த நாடற்ற இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்போம் என்றும் அவர்கள் கூறினர். ஆனால், பக்காத்தானின் ஆட்சி இரண்டு ஆண்டுகளைக் கடக்கப் போகிறது. என்னவாயிற்று அவர்களின் வாக்குறுதி? நாடற்ற 300,000 பேர்களின் நிலைமை என்ன எனவும் நான் விளக்கம் கேட்க விரும்புகிறேன்” – என்றும் டி.மோகன் தனதுரையில் சாடினார்.

முன்பெல்லாம் பக்காத்தான் தலைவர்கள் தேசிய முன்னணி ஆட்சியில் இந்திய சமூகம் பின்தள்ளப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வந்திருப்பதாக சாடினார்கள், ஆனால் இப்போது பார்க்கும்போது பக்காத்தான் ஆட்சியில்தான் இந்திய சமூகத்திற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் அல்ல எனவும் மோகன் தனதுரையில் தெரிவித்தார்.

சொஸ்மா சட்டத்தின் கீழ் கைதுகள் ஏன்?

மனித உரிமைகளுக்கு எதிரான சட்டங்களை அகற்றுவோம் என்ற வாக்குறுதிகளை பக்காத்தான் அரசாங்கம் பல முறை வழங்கியிருக்கிறது. ஆனால் அத்தகைய சொஸ்மா சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்கள் என்று கூறி சிலரையும், பக்காத்தான் கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் சில தலைவர்களையும் பக்காத்தான் அரசாங்கம் கைது செய்திருக்கிறது என்றும் சாடிய மோகன், சட்டத்தையும் நீதியையும் தான் மதிப்பதாகவும் ஆனால் அதே வேளையில் இத்தகைய மனித உரிமைக்குப் புறம்பான சட்டங்களை அரசாங்கம் பயன்படுத்துவது அதன் நிலையற்ற தன்மையையும், உறுதியற்ற நிலையையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது என்று கூறினார்.

“எனவே, மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பக்காத்தான் அரசாங்கம் செயல்பட வேண்டும் என இந்த வேளையில் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். மக்களை உண்மையாகப் பிரதிநிதிக்கும் அரசாங்கமாகச் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” எனவும் மோகன் வலியுறுத்தினார்.