கோலாலம்பூர்: ரபிசி ராம்லியின் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பு வழக்கறிஞர் விண்ணப்பித்த மேல்முறையீட்டை மீண்டும் திரும்பப் பெற்றதையடுத்து, தேசிய பிட்லாட் கார்ப்பரேஷன் (என்எப்சி) தொடர்பான வங்கி பத்திரங்களின் விவரங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பிகேஆர் உதவித் தலைவர் முகமட் ரபிசி ரம்லி முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் வங்கி எழுத்தர் ஜோஹரி முகமட், முகமட் ரபிசியுடன் சதித்திட்டம் தீட்டப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டையும் அரசு தரப்பு மீண்டும் திரும்பப் பெற்றுள்ளது.
மேல்முறையீடு மீண்டும் பெறுவதற்கான கடிதத்தை கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி அரசு தரப்பு தாக்கல் செய்ததாக துணை அரசு வழக்கறிஞர் ஜஸ்மி ஹாமிசா ஜாபார் கூறினார்.
“எனவே இரண்டு முறையீடுகளையும் அரசு தரப்பு மீண்டும் பெற்றுள்ளது” என்று அவர் கூறினார். மேலும், நீதிமன்றம் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது என்று அவர் குறிப்பிட்டார்.
எனவே உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி ரபிசி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டத்து இறுதியானது.
ஷா அலாம் உயர்நீதிமன்றம் நவம்பர் 15-ஆம் தேதி முகமட் ரபிசி மற்றும் ஜோஹாரி ஆகியோரை வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டத்தின் (பாபியா) கீழ் இருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.