ஈப்போ: இரண்டாம் உலகப் போரின் எட்டு வெடிகுண்டுகள் இங்குள்ள செயின்ட் ஜான் தெருவில் உள்ள ஈப்போ கார்கோ டெர்மினல் லேண்ட் போர்ட் பகுதியைச் சுற்றி நேற்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன.
ஈப்போ காவல் துறைத் துணைத் தலைவர் முகமட் நோர்டின் அப்துல்லா கூறுகையில், பிற்பகல் 2.45 மணியளவில் நிறுவனம் ஒன்றின் மேற்பார்வையாளர் ஒருவர் அந்த பகுதியில் மண் தோண்டும் பணிகளை மேற்கொண்டிருந்த போது இந்த வெடிகுண்டுகளைக் கண்டெடுத்ததாகக் கூறினார்.
ஆரம்பத்தில் பராமரிப்புப் பணிகளை அந்நிறுவனம் மேற்கொண்டதில், அப்பகுதியில் பழைய குண்டுகளை ஒத்த நான்கு உலோகப் பொருட்களை மட்டுமே கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஆயுதப்படைகள் மற்றும் வெடிகுண்டு அழிப்பு பிரிவு (யுபிபி) அந்த பொருட்களை பழைய குண்டு என்று அடையாளம் காட்டியது.
“யுபிபி உறுப்பினர்கள் பின்னர் அந்த பகுதியை சுற்றி தோண்டும் நடவடிக்கை பணிகளை மேற்கொண்டனர், மேலும் நான்கு குண்டுகளை கண்டுபிடிக்க முடிந்தது. மொத்தமாக எட்டு குண்டுகளை கண்டு பிடித்தனர்.”
“இந்த கண்டுபிடிப்பின் மூலம், கடந்த உலகப் போரின்போது இந்த பகுதி ஒரு காலத்தில் ஜப்பானியர்களால் ஒரு கிடங்காக பயன்படுத்தப்பட்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று முகமட் நோர்டின் கூறினார்.
அனைத்து குண்டுகளும் பின்னர் லாஹாட்டில் உள்ள ஒரு குவாரியில் வெடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கண்டுபிடிப்பு பகுதி பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் மக்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.