கோலாலம்பூர்: சீன கல்வியாளர் குழு நடத்தவிருக்கும் சீன அமைப்புகள் காங்கிரஸ் இன ரீதியிலான தாக்குதல் என்பதை, சீன பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்புச் சங்கம் (ஜியாவோ சோங்) மறுத்துள்ளது.
ஜியாவோ சோங் தலைவர் ஓங் சியோ சுவென் கூறுகையில், ஜாவி பாடங்களை சீனப் பள்ளிகளில் அமல்படுத்துவதை எதிர்த்துதான் இந்த மாநாடு நடத்தப்படுவதாகக் கூறினார்.
“இது (காங்கிரஸ்) திட்டமிட்டபடி செல்லும். இது மற்ற இனங்களைத் தாக்காது அல்லது மத்திய அரசியலமைப்பை மீறி செயல்படாது.”
“ஜாவி பாடத்தை சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் தடை செய்வதற்கான காங்கிரஸ் இது. பிறர் கூறுவது போல இனங்களை எதிர்க்கும் காங்கிரஸ் அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.
டிசம்பர் 28-ஆம் தேதி காஜாங்கில் நடைபெற இருக்கும் மாநாடு குறித்து பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் எச்சரிக்கை குறித்து அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
எவ்வாறாயினும், டாக்டர் மகாதீரின் கூற்றுக்கு தாம் உடன்படவில்லை என்று ஓங் கூறினார்.