கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் குறைந்தபட்ச ஊதிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தமது சமூகப் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
நிர்வாகத்தை கையில் எடுப்பதற்கு முன்பதாக, 1,500 ரிங்கிட் வருமானத்தில் வாழ்வது நியாயமற்றது என்று சைட் சாத்திக் சைட் அப்துல் ரஹ்மான் ஒருமுறை குறிப்பிட்டதை நஜிப் சுட்டிக் காட்டினார்.
“அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 1,600 அல்லது 1,700 ரிங்கிட்டாக உயர்த்தப்பட வேண்டும். அவ்வளவுதான்” என்று நஜிப் கூறினார்.
தேசிய ஊதிய ஆலோசனைக் குழு சட்டம் 2011 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், மலேசியா குறைந்தபட்ச ஊதியக் கொள்கையை 2012-இல் அறிமுகப்படுத்தியது. 2016-ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய உத்தரவுபடி, மாகாண குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 1,000 ரிங்கிட் அல்லது தீபகற்ப மலேசியாவிற்கு ஒரு மணி நேரத்திற்கு 4.81 ரிங்கிட் மற்றும் மாதத்திற்கு 920 ரிங்கிட் அல்லது சபா, சரவாக் மற்றும் லாபுவானுக்கு 4.42 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டது.
நிர்வாகத்தை எடுத்த பிறகு, குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மாதத்திற்கு 1,100 ரிங்கிட்டாக நம்பிக்கைக் கூட்டணி அரசு மாற்றியது.
அதன் 34-வது தேர்தல் வாக்குறுதியில், நம்பிக்கைக் கூட்டணி தனது நிர்வாகத்தின் முதல் காலகட்டத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை 1,500 ரிங்கிட்டாக உயர்த்துவதற்கான தனது உறுதிப்பாட்டைக் கூறியது. மேலும் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஊதிய விகிதங்களை மதிப்பாய்வு செய்வதாகவும் கூறியிருந்தது.
2020-ஆம் ஆண்டு ஜனவரி முதல் குறைந்தபட்ச ஊதியம் 1,200 ரிங்கிட்டாக உயர்த்தப்படும், ஆனால் முக்கிய மலேசிய நகரங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே என்று 2020 வரவுசெலவுத் திட்டத்தை அறிவித்த நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்திருந்தார்.