Home இந்தியா பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்- மன்மோகன் சிங்

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்- மன்மோகன் சிங்

534
0
SHARE
Ad

manmohan-singhபுது தில்லி,  ஏப்ரல் 8- பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்ற கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங், தில்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டங்களைத் திருத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது என்பதை ஒப்புக் கொண்டார்.

தேவை ஏற்படும்போது நிதித்துறையிலும், சட்டவிதிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதுபோன்ற நிகழ்வுகளின் போது எழுப்பப்படும் கருத்துகள், அந்த நேரத்துக்கு மட்டும் ஏற்படுவதாக இருக்கக் கூடாது என்றார்.

#TamilSchoolmychoice

தில்லி பாலியல் பலாத்கார சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசிய மன்மோகன் சிங், அந்த கொடூரமான சோக சம்பவம் மூலம் நமது நாட்டில் சட்டங்கள், நீதி வழங்கும் முறையை அவசரமாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சம்பவத்தின் மூலம் ஏற்பட்ட துயரத்தில் இருந்தும், மனக்கசப்பில் இருந்தும் வெளியே வர நாம் நம்மை அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில் நமது சட்டவிதிகள் போதுமானது இல்லை என்பதை போராட்டங்கள் வெளிப்படுத்தின.

அதே நேரத்தில் இது தொடர்பான மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அரசு நடந்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

நமது நாட்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, நீதிபதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. 10 லட்சம் பேருக்கு 15.5 நீதிபதிகள் என்ற விகிதமே உள்ளது. வழக்குகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இது விஷயத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமஸ் கபீரின் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். நீதிபதிகளை அதிக அளவில் நியமிக்க மாநில முதல்வர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் 3 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 26 சதவீதம் வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன. 14-வது நிதி கமிஷன் மூலம் மாநில அரசுகள் நீதித்துறையில் செலவிட அதிக நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து தீர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் பேசினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க, சிறப்பு, விரைவு நீதிமன்றங்களை அமைத்த நீதித்துறைக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.