கோலாலம்பூர் – மாறிவரும் நவீன வாழ்க்கை முறையில் ஓர் அங்கம் கிராப் எனப்படும் வாடகை வண்டி சேவையும், அதனுடன் இணைந்த ‘கிராப் புட்’ (GrabFood) எனப்படும் உணவு விநியோக சேவை வணிகமும்!
நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், அதன் காரணமாக ஏற்படும் நேர இழப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தங்களுக்கு வேண்டிய உணவுகளை கிராப் புட் மூலம் வரவழைத்து பெற்றுக் கொள்ளும் வழக்கம் தற்போது பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது.
இந்த வணிகத்திற்கு எதிர்காலத்தில் இருக்கக் கூடிய விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு, இப்போதிருந்தே அதற்கான திட்டங்களை கிராப் புட் நிறுவனம் வடிவமைத்து வருகிறது.
கிராப் எக்ஸ்பிரஸ் (GrabExpress) மற்றும் கிராப் மார்ட் (GrabMart) எனப்படும் புதிய சேவைகளையும் அந்நிறுவனம் தொடக்கியிருக்கிறது.
இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, அனைத்துத் தரப்புகளும் மேலும் பயனடைய முடியும் என அந்நிறுவனம் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தது. தற்போது 19 நகர்களில் கிராப் புட் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அந்நகர்களில் உள்ள உணவகங்களும் கூடுதல் வருமானத்தைப் பெற முடியும்.
முன்பு முக்கிய நகர்களிலும், கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் வழங்கப்பட்டு வந்த இந்த சேவைகள் தற்போது காஜாங், பாங்கி, சுங்கை பூலோ, ரவாங், ஈப்போ, தைப்பிங், சிரம்பான், நீலாய், குவாந்தான், கோத்தா பாரு, கோலதிரெங்கானு, மிரி, பிந்துலு, பத்து பகாட், மூவார், அலோர்ஸ்டார், சுங்கைப்பட்டாணி, செபராங் பிறை, லங்காவி ஆகிய நகர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
2019 ஆண்டில் மட்டும் கிராப் புட் சேவைகள் நான்கு மடங்காக உயர்ந்திருக்கின்றன என அந்நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நகர்களில் இருந்து ஒதுக்குப் புறத்தில் உள்ள சிறிய உணவகங்களும் கிராப் புட் சேவைகளின் மூலம் தங்களின் வணிகங்களை மேம்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்றும், புதிய விரிவாக்கத்தின்வழி உணவகங்களின் வருமானங்கள் மேலும் அதிகரிக்கும் எனவும் கிராப் புட் நிறுவனம் மேலும் தெரிவித்தது.