ஜகார்த்தா: கடந்த புதன்கிழமை முதல் ஜகார்த்தாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 பேராக அதிகரித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை வெள்ள நிலைமை மீண்டு வருகின்ற போதிலும், 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக நிவாரண மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனிசிய தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (பிஎன்பிபி) கூற்றுபடி, நேற்றிரவு வியாழக்கிழமை 9 மணி நிலவரப்படி வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக இருப்பதாகவும், இறந்தவர்கள் கடும் நீரோட்டங்கள், நிலச்சரிவுகள், மின்சாரம் தாக்கி மற்றும் தாழ்வெப்பநிலை (hypothermia) ஆகியவற்றால் மூழ்கி இறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
புதன்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் ஜகார்த்தாவுக்கு அருகிலுள்ள நகரங்களான டாங்கேராங், டெபோக், பெகாசி மற்றும் போகோர் ஆகியவையும் வெள்ளத்தில் மூழ்கின.
“அதிக மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாலும், மேலும் நீர் நிலைகள் கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், மக்கள் வீட்டை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று பிஎன்பிபி கேட்டுக் கொள்கிறது,” என்று பிஎன்பிபி தரவு, தகவல் மற்றும் சமூக உறவுகள் தலைவர் அகஸ் விபோவோ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.