கோலாலம்பூர்: நாட்டில் அரசு ஊழியர்கள் எந்த அரசியல் கட்சியிலும் பதவி வகிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று பொதுப் பணிச் சேவை துறைத் தலைவர் டத்தோ முகமட் கைருல் அடிப் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
மக்களுக்குச் சேவை செய்வதில், அரசு ஊழியர்கள் அரசியல் உணர்வோடோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ கூடாது என்ற அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப இந்த கொள்கை உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
“கடந்த நவம்பர் 1-ஆம் தேதி அமைச்சரவையுடனான ஒரு சந்திப்பில், அரசு ஊழியர்கள் அரசியலில் பங்கேற்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். மனித உரிமைகளை பாதுகாக்க, அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் ஈடுபடலாம், ஆனால் (அவர்கள்) நடுநிலை வகிப்பதை உறுதி செய்யதோடு, பதவியில் இருக்க அனுமதிக்கப்படுவதில்லை” என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையில், அரசாங்கத்தைப் பற்றி எந்தவொரு பொய்யான அறிக்கைகளையும் வெளியிடவோ அல்லது பரப்பவோ கூடாது என்று அரசு ஊழியர்களுக்கு முகமட் கைருல் அடிப் எச்சரித்தார். அவ்வாறு செய்தால் அவர்கள் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
“தவறான தகவல்களை பரப்பும் எந்தவொரு அரசு ஊழியரையும் நாங்கள் கவனித்து வருகிறோம், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்று அவர் கூறினார்.
கடந்த மூன்று மாதங்களாக தவறான தகவல்களை பரப்பியதற்காக மூன்று அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.