கோலாலம்பூர்: 2020 தூரநோக்கு திட்டத்தின் நோக்கம் முழுமையாக அடையவில்லை என்றாலும், 1991-இல் தொடங்கப்பட்டதிலிருந்து நிறைய முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் மலேசியா கண்டுள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
“நாம் இதுவரை அதை அடையவில்லை என்றாலும், 2020-இல் நாம் அதிகம் சாதித்துள்ளோம்.”
“மக்கள் வளமாக வாழ்கிறார்கள், நாடு வளமாக உள்ளது. நாடு முழுவதும் வளர்ச்சி தெளிவாகக் காணப்படுகிறது ”என்று அவர் இன்று திங்கட்கிழமை காலை கூல் எப்எம் வானொலி உரையாடலின் போது கூறினார்.
மலேசியா ஒரு வளர்ந்த நாடாகக் கருதக்கூடிய நிலையை எட்டவில்லை என்றாலும், சில துறைகளின் சாதனைகள் பெருமைப்படக்கூடியது என்று பிரதமர் தெரிவித்தார்.
“ஒரு வளர்ந்த தேசமாக மாற, 2020-இல் ஒன்பது சவால்களை எதிர்கொள்ள விரும்பினோம். அதாவது ஒற்றுமை, சுதந்திரமான சமூகங்கள், ஜனநாயக சமூகங்கள், தார்மீக மற்றும் நெறிமுறை சமூகங்கள், தாராளமய சமூகங்கள், முற்போக்கான மற்றும் அறிவியல் சமூகங்கள், அக்கறையுள்ள சமூகங்கள், பொருளாதாரத்தில் நியாயமான சமூகங்கள்.”
மக்கள் இந்த சவால்களை முதலில் அறிந்திருக்க வேண்டும் என்று டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.
“2020 என்றால் பறக்கக்கூடிய கார்கள் மட்டுமே என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அது நம் இலக்கே அல்ல, இது மற்ற நாடுகளில் சாத்தியமான சாதனை “என்று அவர் கூறினார்.