கோலாலம்பூர்: மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) அதன் உறுப்பினர்களில் 40 பேரை ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்க உதவுவதற்காக தயார் நிலையில் வைத்துள்ளதாகக் கூறியுள்ளது.
நேற்று திங்கட்கிழமை தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்ஏடிஎம்ஏ) உடனான ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குப் பின்னர் இந்தத் தேர்வு நடத்தப்பட்டதாக ஜேபிபிஎம் இயக்குநர் டத்தோ முகமட் ஹம்டான் வாஹிட் தெரிவித்தார்.
“நாம் அங்கு செல்ல இருக்கும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதால், நன்கு தயாராக உள்ளோம் என்று நம்புகிறோம். கொண்டு செல்லப்பட வேண்டிய தளவாடங்கள் காட்டுத் தீயை அணைக்கக்கூடிய அடிப்படை தளவாடங்கள் ஆகும்.” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், ஆஸ்திரேலியாவின் உத்தரவு கிடைத்தப் பிறகே தாங்கள் செயல்பட காத்திருப்பதாக அவர் கூறினார்.
அண்மையில், காட்டு தீ நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஆஸ்திரேலியாவுக்கு உதவ தேவையான உதவிகளை வழங்க மலேசியா தயாராக இருப்பதாக துணை பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறியது குறிப்பிடத்தக்கது.