கோலாலம்பூர் – எல்லாக் காலத்திலும் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஹீரோவாகத் திகழும் எம்ஜிஆரையும் ஒரு விஷயத்தில் ரஜினி முந்தி விட்டார் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். தனது 60-வது வயதில் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு அரசியலில் நுழைந்து, முதல்வராகி சாதனை படைத்தார் எம்ஜிஆர் என்றாலும், 70 வயதைக் கடக்கும் போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்.
ஆனால், ரஜினியோ அதே 70-வது வயதில் இன்னும் அதிரடியாக முன்னணி நடிகராக, அதுவும் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளிலும் சுறுசுறுப்புடன் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறார் – அதற்கு சாட்சிதான் ‘தர்பார்’.
படம் தொடங்கியது முதல் நிமிடத்துக்கு நிமிடம் ரஜினியின் அதிரடிதான். ஆட்டம், பாட்டம், ஸ்டைல், நகைச்சுவை, சண்டைக் காட்சி, மகளிடம் காட்டும் தந்தை பாசம், நயன்தாராவைக் காதலிக்கும் நளினம், உயர் காவல் அதிகாரியாக சக அதிகாரிகளிடம் காட்டும் கண்டிப்பு, பெரிய மனிதர்களானாலும் அசராத கம்பீரம் இப்படி எல்லா இடங்களிலும் தனது பாணியில் மிரட்டியிருக்கும் ரஜினி, தர்பாரை இன்னொரு வெற்றிப் படமாக தூக்கிப் பிடிக்கிறார்.
எனக்குப் பிறகுதான் நீங்கள் எல்லாம் என இன்றைய முன்னணி தமிழ்ப் பட நடிகர்களுக்கும் சவால் விடுகிறார்.
கதை – திரைக்கதை
முழுக்க முழுக்க ரஜினி படம் என்றாலும், படத்தின் நேர்த்திக்கும் சிறப்புக்கும் உரியவர் இயக்குநர் முருகதாஸ்தான்! ரஜினிதான் கையில் கிடைத்து விட்டாரே என அவருக்கேற்றபடி காட்சிகளை அமைத்து, ரஜினி இரசிகர்களை மட்டும் திருப்திப்படுத்துவோம் என சுலபமான வழியைக் கையாளாமல் படத்திற்காகவும், கதை, திரைக்கதை அமைப்புக்காகவும் நிறைய உழைத்திருக்கிறார்.
காவல் துறையில் நடக்கும் புலனாய்வுகளை விரிவாகக் காட்டி, முழுக்க முழுக்க காவல் துறையையைச் சுற்றியே இறுதி வரை நடக்கும் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் முருகதாஸ். பல காட்சிகளில் அவரது வித்தியாசமும், புத்திசாலித்தனமும் தெரிகிறது.
கொஞ்சம் கூட அரசியல் கலப்பில்லாத கதை. மும்பை காவல் துறையில் அதிகாரிகளுக்கிடையில் ஏற்படும் தொய்வு, அவநம்பிக்கை போன்ற காரணங்களாலும், அங்கு உயர்ந்திருக்கும் குற்றங்களாலும் மும்பை நகர காவல் துறை ஆணையராக நியமிக்கப்படுகிறார் ரஜினி – அதாவது ஆதித்யா அருணாச்சலம்.
அதிரடியாக நடவடிக்கையில் இறங்கும் அதே வேளையில், புத்திசாலித்தனமாகவும், காவல் துறைக்கே உரிய புலனாய்வுத் திறனோடும், பெரிய மனிதர்கள் போர்வையில் உலவும் குற்றவாளிகளையும் அவர்களது பிள்ளைகளையும் தூக்கி சிறையில் போடுகிறார்.
தனது மகனைக் காப்பாற்ற பெரிய மனிதர் ஒருவர் அரசாங்கத்தின் பல்வேறு தரப்புகளின் துணையோடு முயற்சிகள் செய்ய அத்தனை பேர்களின் முகத்திரையையும் கிழிக்கிறார் ரஜினி. அந்தப் போராட்டத்தில் 27 வருடங்களுக்கு முன்னர் தலைமறைவான போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனோடு ஏற்படும் மோதம், ரஜினிக்கு ஏற்படும் சில இழப்பு என பல திருப்பங்களோடு செல்கிறது திரைக்கதை.
கதையில் பல இடங்களில் நம்ப முடியாத சம்பவங்கள், லாஜிக் மீறல்கள் என்றாலும், ரஜினி தனது அசத்தல் நடிப்பால் அதை மறக்கச் செய்ய, அடுத்தடுத்து காட்சிகளை நகர்த்து விறுவிறுப்பு இயக்க பாணியால் முருகதாஸ் படத்தை இரசிக்கும்படி கொண்டு செல்கிறார்.
படத்தின் சிறப்புகள்
ரஜினி, முருகதாஸ் கூட்டணி தவிர கவரும் இன்னொரு அம்சம் சந்தோஷ் சிவனின் அனுபவம் மிக்க ஒளிப்பதிவு. கண்களை உறுத்தாத அளவான வெளிச்சத்துடன், படத்தின் காட்சிகளின் தாக்கத்தைத் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியிருக்கும் படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் படத்தின் பரபரப்புக்கு மற்றொரு காரணம்.
அனிருத் பின்னணி இசையை சிறப்பாகக் கையாண்டிருந்தாலும் பாடல்களில் இன்னும் கூடுதல் கவனத்தைச் செலுத்தியிருக்கலாம். ஒரே சத்தம்!
ரஜினியின் பழைய படங்களில் மறக்க முடியாத அன்றைய இசையமைப்பாளர் தேவாவின் அதிரடி பின்னணி இசையை அப்படியே பயன்படுத்தியிருப்பது அனிருத்தின் பெருந்தன்மை.
கதை மும்பையில் நடப்பதால் வில்லன்கள் எல்லாம் மும்பை நடிகர்கள்தான். அனுபவம் மிக்க, கட்டுமஸ்தான சுனில் ஷெட்டி தனது கம்பீரமான வில்லத்தனத்தால் ரஜினிக்குப் பொருத்தமான வில்லனாக உயர்ந்து நிற்கிறார். அவரும் ரஜினியும் மோதும் இறுதிக் கட்ட சண்டைக்காட்சி இரு நடிகர்களுக்கும் சம வாய்ப்புடன் மிரட்டலாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.
ரஜினியின் மகளாக வரும் நிவேதா தோமஸ் பொருத்தமான தேர்வு. பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் மகளாக வந்து சிறந்த நடிப்பை வழங்கியவர் இதில் ரஜினியின் மகளாக உருக வைக்கிறார். அவரும் ரஜினியும் தந்தை மகளாகவும், நண்பர்களைப் போலவும் அடிக்கும் லூட்டிகள் படத்தில் கவரும் இன்னொரு அம்சம்.
நயன்தாரா படம் முழுக்க சேலையுடன் நாகரிகத்துடன் வருகிறார். அழகும் நளினமும் குறைவில்லை என்றாலும், அவருக்கான வாய்ப்புகள் படத்தில் குறைவு. ரஜினி அவரைக் காதலிக்க முற்படும் காட்சிகள் கலகலப்பு.
யோகிபாபு நகைச்சுவைக்காக ரஜினியுடன் இணைகிறார். இருந்தாலும் யோகிபாபுவுக்கே உரிய நக்கல், நையாண்டி இதில் காணவில்லை.
படத்தின் பலவீனங்கள்
நாம் ஏற்கனவே கூறியபடி படத்தின் திரைக்கதையில் நம்ப முடியாத திருப்பங்கள், லாஜிக் மீறல்கள் இருந்தாலும், வழக்கம்போல் பத்து பேரை ஒற்றை ஆளாக ரஜினி அடித்து வீழ்த்தும் காட்சிகள் இருந்தாலும், முழுக்க காவல் துறையை மட்டுமே சுற்றிவரும் கதையை வேகமாக, விறுவிறுப்புடன் நகர்த்தும் இயக்குநர் முருகதாசின் சாமர்த்தியமும், அதற்கேற்ற ரஜினியின் சுறுசுறுப்பான, அதிரடி நடிப்பும் இணைந்து அனைத்தையும் நாம் மறக்கும்படி செய்கின்றன.
தாராளமாகப் பார்த்து விசிலடிக்கலாம்!