சென்னை – கடந்த ஜனவரி 9-ஆம் தேதி முதல் உலகம் எங்கும் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தின் திரைக்கதையில் முக்கிய அம்சங்களாக இடம் பெற்றிருந்தவை, சிறையில் இருக்கும் வில்லன் ஒருவன் செய்யும் ஆள்மாறாட்டக் காட்சிகள்.
அந்த ஆள்மாறாட்டக் காட்சிகளின்போது “சிறையிலிருந்து வெளியே ஷாப்பிங் கூட போகலாம் சார். வேணும்னா சொல்லுங்க ஏற்பாடு செய்கிறோம்” என்று ஒரு கட்டத்தில் வசனம் இடம் பெறும்.
இன்னொரு காட்சியில் சிறைக்கைதி ஒருவன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருப்பது போலவும் “பணம் கொடுத்தால் சிறையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்ற தோரணையிலும் வசனங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து இந்த வசனங்களும் காட்சிகளும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் தற்போது பெங்களூரு சிறையில் இருப்பவருமான சசிகலாவை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன என சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த வசனங்கள் நீக்கப்படும் என தயாரிப்பாளர்கள் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சசிகலா குறித்த சர்ச்சை வசனங்கள் நீக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து தர்பார் படத் தயாரிப்பாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.