Home One Line P2 திமுக-காங்கிரஸ் மோதல் : விரிவாகுமா? சரியாகுமா?

திமுக-காங்கிரஸ் மோதல் : விரிவாகுமா? சரியாகுமா?

766
0
SHARE
Ad

சென்னை – தமிழகக் காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் மோதல் ஆங்காங்கே பிரதிபலிக்கத் தொடங்கியிருப்பதால், இந்த விரிசல் மேலும் விரிவாகுமா அல்லது இரண்டு கட்சிகளும் சமாதானமாகி நல்லிணக்கத்தைக் காணுமா என்ற ஆர்வம் தமிழக அரசியல் பார்வையாளர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து காங்கிரசுக்கு திமுக எந்த ஒன்றியத் தலைவர் பதவியும் ஒதுக்கவில்லை – முக்கியத்துவம் தரவில்லை என தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனும் காங்கிரசைக் கடுமையாகச் சாடி அறிக்கை விடுத்தார்.

இந்த அறிக்கைப் போர் வெளிச்சத்துக்கு வந்த அடுத்த நாள் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான தலைவர் பதவி தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு எதிராக வாக்களித்ததாகவும், அதன் காரணமாக சில தலைவர் பதவிகள் அதிமுக வசம் சென்றன என்றும் புகார்கள் எழுந்தன.

#TamilSchoolmychoice

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை இந்தியக் குடியுரிமை சட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பில் அனைத்து கட்சி எதிர்ப்புக் கூட்டம் ஒன்றை காங்கிரஸ் தலைமையில் சோனியா காந்தி புதுடில்லியில் கூட்டியிருந்தார். திமுக சார்பில் அந்தக் கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை.

திமுகவின் புறக்கணிப்பை வட இந்திய ஊடகங்கள் பெரிதுபடுத்தி எழுதியிருந்தன. காங்கிரசும், திமுகவும் தொடர்ந்து கூட்டணியாக நீடிக்குமா அல்லது உறவை முறித்துக் கொள்ளுமா என்ற பரபரப்புக் கேள்வி தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இதற்கிடையில் தமிழகக் காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அழகிரி புதுடில்லியில் சோனியாவை இன்று செவ்வாய்க்கிழமை சந்திக்கிறார். இந்த சந்திப்பும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.