கோலாலம்பூர்: அண்மையில் கல்வி அமைச்சராக பதவியேற்ற பின்னர் நிறைய தகவல்களை ஊன்றி கவனிக்க வேண்டியிருப்பதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
இருப்பினும், மாணவர்கள் அணியக்கூடிய காலணிகள் நிறம் குறித்து தாம் ஒரு முடிவு வைத்திருப்பதாக அவர் கூறினார்.
“நான் இப்போது கொஞ்சம் குழப்பமடைந்துள்ளேன். ஏனென்றால் எனக்கு அதிகமான விவகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே நான் இப்போது அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”
“ஆனால், நான் தீர்மானித்த ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் பழுப்பு நிற காலணிகள், கருப்பு காலணிகள், வெள்ளை காலணிகள், சாம்பல் காலணிகள், என எது வேண்டுமானாலும் அணியலாம்.” என்று நேற்று தெரிவித்தார்.
முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கருப்பு நிற காலணிகள் பள்ளியில் அணிய வேண்டும் என்று தீர்மானித்ததற்கு, பெருவாறியான விமர்சனங்கள் எழுந்தன.
இதனிடையே, கல்வி அமைச்சு அடுத்த ஆண்டு முதல் மாணவர்களை கருப்பு காலணிகளை அணிய குறிப்பிட்டுள்ளது. இது நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முன்னர், மாணவர்கள் கருப்பு அல்லது வெள்ளை காலணிகளை அணிய அனுமதிக்கப்படுகிறார்கள்.