கோத்தா கினபாலு: கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரையிலும் மொத்தம் 19 வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டிருக்கும்.
ஒன்பது மணி நேரத்திற்கும் மேலான இந்த வாக்குப்பதிவில் மொத்தம் 29,619 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
கடந்த செவ்வாயன்று, முன்கூட்டிய வாக்களிப்பில் ஒன்பது வாக்காளர்களில் எட்டு பேர் வாக்களித்தனர். மேலும், 35 அஞ்சல் வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
கிமானிஸ் இடைத்தேர்தலில் வாரிசான் கட்சியைச் சேர்ந்த டத்தோ காரிம் புஜாங் மற்றும் தேசிய முன்னணி வேட்பாளரான முகமட் அலாமின் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
வாக்குப்பதிவு நடவடிக்கைகளை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் 653 தேர்தல் அதிகாரிகளை நியமித்துள்ளது.
சுமார் 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகும் என்றும், வாக்கெடுப்பு முடிவுகள் இரவு 10 மணிக்குள் அறியப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 14-வது பொதுத் தேர்தலில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ அனிபா அமானின் வெற்றியை நீதிமன்றம் இரத்து செய்ததை அடுத்து, கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது.